டெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்
- IndiaGlitz, [Wednesday,April 01 2020]
கடந்த மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடந்த நிலையில் இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது தெரிய வந்துள்ளதை அடுத்து கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். கொரோனா வைரஸைத் தடுக்க சமூக விலகல் தேவை என மத்திய மாநில அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில், அந்த அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் தப்லிக் ஜமாத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கூடி மத வழிபாடு மாநாடும் நடந்துள்ளது.
இந்த மாநாட்டில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் இருந்தும், 250க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுச் திரும்பியவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியும் அதில் 10 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனை அடுத்தே ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..