ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
- IndiaGlitz, [Friday,September 25 2020] Sports News
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி கடந்த தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்பும்
என நம்பப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் துபாயில் நடக்கும் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தனது முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணி, இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது
இடத்தில் உள்ளது.
மிகப் பெரிய இழப்பு
மறுபுறம் டெல்லி அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான சூப்பர் ஓவர் த்ரில் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அனுபவ வீரரான சுரேஷ் ரெய்னா இல்லாதது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கண்கூடாகவே தெரிகிறது. மும்பை அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வென்ற அம்பதி ராயுடு காயம் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இவருக்கு பதிலாக இளம் ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
டாப் ஆர்டரில் தோனி?
சென்னை அணியின் மற்றோரு பலவீனமாகக் கருதப்படுவது கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் தாமதமாகக் களம் இறங்குவது. அனுபவ வீரரான அவர் ஏன் முன்னதாகக் களமிறங்கத் தயங்குகிறார் என்பது மிகப்
பெரிய கேள்வியாகவே இருக்கிறது. இளம் ஆல் ரவுண்டரான சாம் கரன் பவுலிங்கில் கைகொடுத்தாலும் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கத் தவறுகிறார். அதனால் தோனி டாப் ஆர்டரில் களமிறங்க
வேண்டிய நிலை உள்ளது.
இடையே பெரிய விரிசல்
முரளி விஜய் தொடர்ந்து தடுமாறுவதால் அவருக்கு இன்று வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். முரளிக்குப் பதிலாக டூ பிளஸி தொடக்க வீரராகக் களமிறங்குவார் எனத் தெரிகிறது. முதல் போட்டியில் சரியாக ஆடாத ஷேன் வாட்சன் இரண்டாவது போட்டியில் சற்று சுதாரித்துக்கொண்டார். அவர் இன்று நன்றாக ஆடும் பட்சத்தில் சென்னையின் தொடக்கம் சிறப்பாக அமையும்.
நிகிடி சொதப்பல்
பவுலிங்கைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் மெகா சொதப்பு சொதப்பிய லுங்கி நிகிடிக்கு பதில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ் ஹசில்வுட் இன்று களமிறங்க வாய்ப்பு உள்ளது. அதேபோல சார்துல் தாகூருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
அஸ்வின் சந்தேகம்
டெல்லி அணியைப் பொருத்தவரையில் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்குக் கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால் இன்று அவர் பங்கேற்பது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா ஆடுவார் எனத் தெரிகிறது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டெல்லி அணியில் ஷிகர் தவன், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டோனிஸ் எனச் சிறந்த பேட்மேன்கள் சென்னை பவுலர்களுக்கு சவால் அளிக்க வரிசையாகக் காத்திருக்கின்றனர். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது.
இது வரலாறு
ஐபிஎல் அரங்கில் சென்னை, டெல்லி அணிகள் 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இரு அணிகளும் யுஏஇயில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஒரே ஒரு முறை மோதியுள்ளது. அதில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணி வசம் வெற்றி வரலாறு இருந்தாலும் தற்போது லேசாக எடைபோடக் கூடாது. டெல்லி அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் முனைப்பில் களமிறங்கும்.
எதிர்பார்க்கப்படும் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், ஃபாஃப் டூ பிளஸி, ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரன், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், சார்துல் தாகூர், பியூஷ் சாவ்லா, ஜாஸ் ஹசில்வுட்
டெல்லி கேபிடல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவன், ஷிம்ரன் ஹெட்மயர், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், மார்க்கஸ் ஸ்டோனிஸ், அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா, காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜ், மோஹித் ஷர்மா.