பயமுறுத்தும் AY 4.2 கொரோனா… தமிழகத்திலும் பாதிப்பா?
- IndiaGlitz, [Friday,October 29 2021]
கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக டெல்டா வைரஸின் உருமாறிய AY 4.2 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் இந்த வகை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்றை ஏற்படுத்தும் SARS-Cov-2 வகை கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பர் முதல் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து அதன் மூலம் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் துவங்கிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது.
தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து புதிய AY 4.2 எனும் உருமாற்றம் கொண்ட புதிய வைரஸை உற்பத்தி செய்திருக்கிறது. முதலில் இங்கிலாந்து நாட்டில் பரவத் துவங்கிய இந்த வைரஸ் பின்பு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் தற்போது கொரோனாவின் 3ஆம் அலை பரவலுக்கு வித்திட்டிருக்கிறது. இதனால் பல நாடுகள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் AY 4.2 வகை கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் தன்மைக் கொண்டது எனக் கூறப்படும் நிலையில் இந்த வைரஸ் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளிவரவில்லை. இந்தியா பொறுத்தவரை AY 4.2 வைரஸ் பாதிப்பு கடந்த சில தினங்களாக கண்டறியப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் 7, கர்நாடகா 2, கேரளா 4, தெலுங்கானா 1 என பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.