புலிகள் காப்பகத்துக்கு உயிர் கொடுத்த தம்பதிகள்- தனி காட்டையே உருவாக்கிய சாமர்த்தியம்
IndiaGlitz, [Tuesday,February 18 2020]
இந்தியாவில் புலிகளை அது வாழுகின்ற இடத்திலேயே வைத்து பார்ப்பதற்காக அமைக்கப் பட்ட சிறந்த இடம் ரதண்பூர் தேசிய பூங்கா. இந்தப் பூங்காவிற்காக அரசாங்கம் பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் இயற்கை எல்லா நேரங்களிலும் வெறுமனே வளங்களை மட்டும் கொட்டி கொடுத்து விடுவதில்லை. மனிதனின் சுரண்டல், வறட்சி போன்ற காரணங்களால் தனது பசுமையை இழந்து, கோரங்களையும் காட்டத் தான் செய்யும். அத்தகையதொரு வறட்சியான சூழலில் ரதண்பூர் புலிகள் சாரணாலயத்தை தனி ஒரு ஆளாக இருந்து உயிர்ப்பித்து காட்டியிருக்கிறார் ஆதித்யா சிங் எனும் ஒரு IAS அதிகாரி.
ரதண்பூர் புலிகள் காப்பகம் வறண்டு போன சூழலில் புலிகள் தங்களது வாழிடங்களை இழந்து தண்ணீருக்காக அலைகின்ற ஒரு கொடுமையான கால கட்டத்தில் தான் ஆதித்யா சிங் தனது வேலையைத் தொடங்கினார். ஏன் இவருக்கு மட்டும் இத்தகைய கரிசனம்? அடிப்படையில் ஒரு இயற்கை விரும்பியான ஆதித்யா சிங் அதற்காக தனது வேலையை விட்டு விட்டு டெல்லியில் இவருக்காக நியமிக்கப் பட்ட வீட்டையும் விட்டு தனி ஒரு ஆளாக ஒரு மாபெரும் மீட்பு பணியை மேற்கொண்டார். தனது வாழ்நாளில் சுமார் இதற்காக 25 வருடங்களை செலவழித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆதித்யா சிங்குடன் இவரது மனைவியும் இணைந்துதான் இதில் இன்னொரு சுவாரசியம்.
ரதண்பூர் புலிகள் காப்பகம்
மத்திய அரசால் 282 கி.மீ. பரப்பளவு கொண்ட ரதண்பூர் காட்டுப் பகுதி முழுவதும் 1955 ஆம் ஆண்டு விலங்குகளின் சரணாலயமாக அறிவிக்கப் பட்டது. புலிகளின் இருப்பினை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு இப்பகுதி 1973 இல் புலிகளின் இருப்பிடமாக அறிவிக்கப் படுகிறது. இதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 1980 ஆம் ஆண்டு இது தேசிய பூங்கா அந்தஸ்தையும் பெறுகிறது. ஆரம்பத்தில் இப்பகுதி வளமையான காடாகவே இருந்தது. இங்குள்ள வன உயிரினங்களின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சியை பார்க்க முடிந்தது.
வெறுமனே 282 கி. மீ. பரப்பளவில் உருவாக்கப் பட்ட இந்த பகுதி பின்னர் அருகிலுள்ள 1334 கி.மீ. தொலைவையும் இணைத்துக் கொண்டு பெரிய சரணாலயத்தையும் மத்திய அரசு உருவாக்கியது. ஆனாலும் இந்தப் பகுதியில் தொடர்ந்து காணப்பட்ட காடு அழிப்பு, வறட்சி போன்ற காரணங்களால் மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து போகிறது. மரங்களின் எண்ணிக்கை குறைந்து, நீர் ஆதாரங்களும் இல்லாமல் விலங்குகள் வாழ்வு பின்னாட்களில் கேள்விக்குரியாகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த ரதண்பூர் புலிகள் காப்பகம் நல்லதொரு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இந்த பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது ஒரு அரசாங்கத் திட்டமோ, அல்லது தனி ஒரு அமைப்போ அல்ல. ஆதித்யா சிங் மற்றும் பூனம் சிங் என்ற ஒரு தம்பதி கொண்டிருந்த இயற்கை நேசம் மட்டுமே இதற்கு காரணம். இவர்கள் எப்படி அவ்வளவு பெரிய புலிகள் சரணாலயத்தை காப்பாற்றினார்கள்? இதுதான் சுவாரசியம்.
பூங்காவை ஒட்டிய காடு
புலிகள் சரணாலயத்திற்கு வருபவர்கள் எல்லோரும் காட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு நகர்ந்து போவார்கள். அப்படி இந்தத் தம்பதிகள் செய்திருந்தால் இன்றைக்கு ரதண்பூர் புலிகள் காப்பகத்தை காப்பாற்றி இருக்க முடியாது. காரணம் அங்குள்ள கடுமையான வறட்சி புலிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து இருக்கும். இதற்காக
Ranthambore Tiger Reserve பகுதியை ஒட்டிய பல தனியாருக்குச் சொந்தமான நிலங்களை விலைக்கு வாங்கி அதில் புதிதாக ஒரு காட்டையே உருவாக்குகின்றனர் இத்தம்பதியினர்.
இவர்கள் உருவாக்கிய காட்டுப் பகுதி தற்போது “பட்லாவ்” என அழைக்கப் படுகிறது. இந்த காட்டுப் பகுதிக்கு அருகில் வாழும் விவசாயிகள் கூட இவர்களது செயலைப் பார்த்து விட்டு தானாகவே இவர்களுக்கு நிலங்களை வழங்க முன் வருகின்றனர்.
முதலில் இந்த காட்டை எப்படி உருவாக்கினோம் என்ற தனது அனுபவத்தை பூனம் சிங் ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொள்கிறார். “மூன்று குட்டிகளுடன் இருந்த ஒரு புலியை பார்த்தேன். அது உடனே எங்கேயோ மறைந்து போனது. திரும்பவும் ரதண்பூருக்கு செல்லலாமா? என எனது கணவரிடம் கேட்டேன். இப்போது ரதண்பூரை ஒட்டி எங்களுக்கு சொந்தமாக ஒரு காட்டுப் பகுதியே இருக்கிறது என்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது” பூனத்தின் வார்த்தைகளில் பெருமிதத்துடன் ஒரு இயற்கையோடு கொண்டாடுகிற ஒரு மனித நேயத்தையும் பார்க்க முடிகிறது.
இந்த தம்பதிகளில் சுமார் 35 ஏக்கர் நிலத்தில பசுமையான ஒரு காட்டையே உருவாக்கி இருக்கிறார்கள். தேசிய பூங்காவை ஒட்டியே இந்தக் காடு இருப்பதால் புலிகள் மட்டுமல்லாது பல்வேறு விலங்குகள் தண்ணீருக்காக இங்கு வந்து செல்கின்றன. கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப் பாட்டை குறைப்பதற்காக பல ஆழ்துளை கிணறுகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காட்டுப் பகுதியை இணைப்பதற்காக 5 ஏக்கர் நிலப்பகுதியையும் தங்களுக்கு சொந்தமாக வாங்கியுள்ளனர். மேலும், பூனம் தான் இதன் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
“காட்டுப் பகுதியில் விலங்குகளை காப்பாற்றுவதற்கு எனக்கு இதைத் தவிர வேறு ஒரு வழியும் தெரியவில்லை. 20 ஆண்டுகளில் பசுமையான ஒரு காட்டை உருவாக்க முடிந்தது. தற்போது புலி, சிறுத்தை, காட்டுப் பன்றிகள் போன்ற அனைத்து விலங்குகளையும் எங்களது காட்டுப் பகுதிக்கு வந்து செல்கிறது” என விலங்குகளைக் காப்பாற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் ஆதித்யா சிங்.
ரதண்பூர் தரிசு பூங்கா நிலத்தை விட இவர்கள் உருவாக்கி இருக்கிற காடு மிகவும் பசுமையான இருக்கிறது. இந்தக் காட்டுப் பகுதியில் தண்ணீர் தாராளமாக கிடைக்கும் போது பக்கத்தில் உள்ள பகுதிகளுக்கு புலிகள் செல்வது தடுக்கப் படுகிறது. இதனால் புலி வேட்டையாட படுவதையும் தடுக்க முடியும். தற்போது ரதண்பூர் காட்டுப் பகுதியில் வெறுமனே 50 புலிகள்தான் இருக்கின்றன. மிகப்பெரிய தேசிய பூங்காவில் வறட்சியைத் தடுக்க தம்பதிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலரது மத்தியில் ஆச்சரியத்தை வரவழைத்து இருக்கிறது.
இந்த வேலையில் பணம் ஒரு பொருட்டு இல்லை. இயற்கை மற்றும் வனவிலங்குகளை காப்பாற்றுவதற்கான எனது பணியை நான் செய்கிறேன். இதே போன்று இந்தியாவில் பலர் தனி காட்டை உருவாக்கும் முயற்சியைப் பற்றி சிந்தித்து வருகிறார்கள். இதுவே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இன்னும் அதிகமான நிலங்களை வாங்க வேண்டும், பக்கத்தில் உள்ள விவசாயிகளையும் இத்தகைய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று தனது கனவுகளை அடுக்கிக் கொண்டே போகிறார் ஆதித்யா என்பது தான் ஆச்சரியமே.
இவர்களது காட்டு பகுதியை ஒட்டி தனி ஒரு வீட்டையும் அதில் சோலார் மின்சார வசதியையும் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று ஒரு தம்பதி புலிகளுக்கு ஒரு மறு வாழ்விடத்தையே அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இந்தியாவில் இவர்களது முயற்சியை பலரும் செய்ய முற்படும்போது ஒரு வளமான உயிர்ச் சூழலையும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தற்போது துளிர் விட்டு இருக்கிறது.