ஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை! கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர முடிவு!
- IndiaGlitz, [Wednesday,May 22 2019]
ஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை ஒரு கோடீஸ்வர தம்பதிகளின் உயிரை பறித்துள்ள சோக சம்பவம் மதுரை அருகே நடந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த வேங்கடசுப்பிரமணியன் என்பவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு படித்து முடித்துவிட்டு அங்கேயே செட்டிலாகி ஆய்வு மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்லைனில் டேட்டா அனாலிசிஸ் பணி செய்து கொண்டு வந்த இவர், ஆய்வு மாணவி ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்றாலும் ஆன்லைன் வேலை மூலம் லட்சம் லட்சமாக வருமானம் வந்தது. இதனால் விரைவில் இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். இந்த நிலையில் எமன்வடிவில் வந்தது ஆன்லைன் ரம்மி. இந்த விளையாட்டில் இருவரும் ஆர்வம் காட்டிய நிலையில் முதலில் கொஞ்சம் பணம் சம்பாதித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தங்களுடைய சேமிப்பை எல்லாம் அதில் விட்டுவிட்டனர். மேலும் கடன் வாங்கியும், கார் முதலியவற்றை விற்றும் ஆன்லைனில் ரம்மி விளையாடி நஷ்டமடைந்தனர். தாங்கள் சேமித்து வைத்த சொத்து அனைத்தையும் இழந்த சோகத்தில் இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என இந்த தம்பதி எழுதி வைத்த லட்டரையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். லட்சம் லட்சமாக சம்பாதித்தும் ஆன்லைன் ரம்மி போதையால் விலைமதிப்பில்லா உயிரை இழந்த தம்பதியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.