கொரோனா வைரஸ் இலங்கை வரை பரவியது – சுற்றுலா பெண் பயணி ஒருவர் பாதிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பல உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற நிலையில் இலங்கையில் பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. சுற்றுலா செல்ல சீனாவில் இருந்து ஜனவரி 25 ஆம் தேதி இலங்கைக்கு சீனப் பெண் ஒருவர் வந்து உள்ளார். அவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப் பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா ("novel" coronavirus) வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை இலங்கையின் சுகாதார துறை அமைச்சகத்தின் பணியாளர் சுதத் சமரவீரர் செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.
மேலும் நோயின் வீரியம் குறித்து அறிய பாதிக்கப் பட்டவரின் ரத்த மாதிரியை வெளிநாட்டிற்கு அனுப்ப உள்ளதாகவும் இலங்கை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சீனப் பெண்ணை தீவிர பாதுகாப்புடன் தனி அறையில் வைத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணி ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பினைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சீனாவில் இருந்து தங்களது நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களைத் தடுக்கும் விதமாக சீன விமான நிலையங்களில் விசா வழங்குவதை தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப் படுத்தப் படும் வரையில் நேரடியாக விமான நிலையங்களில் விசா பெற இயலாது என்பதை சீன அரசாங்கமும் உறுதி படுத்தி உள்ளது.
முன்னதாக சீனாவில் பயிலும் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது. கொரோனா வைரஸ் பரவி வரும் வுஹான் மாகாணத்தில் இலங்கையின் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களை பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியுடன் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் மூலமாக சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது. இந்த பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.
சீன அரசாங்கம் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வுஹான் மாகாணத்திற்கு செல்லவும் அங்கிருந்து வெளியே வரவும் கடுமையான தடையினை விதித்துள்ளது. இதனால் வுஹான் மாகாணத்தில் உள்ள மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வுஹான் மாகாணத்திற்கு விதிக்கப் பட்ட தடை நீக்கப் பட்ட உடன் மாணவர்களை அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை வெளியுறவு துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கட்டுபடுத்தவும் முழுவதுமான குணப்படுத்தவும் இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்க படாத நிலையில் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே ஒரே வழி என அனைத்து நாடுகளும் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட வில்லை என்றாலும், சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேரை தனிமையில் இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய கோவையை சேர்ந்த 4 பேர், சென்னையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதால் அவர்களை பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் வீட்டில் இருக்கும் படியாகவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் 8 பேரின் ரத்த மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதையும் இந்திய சுகாதாரத் துறை உறுதி செய்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com
Comments