கொரோனா பயமா??? சந்தேகங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்...
- IndiaGlitz, [Friday,March 13 2020]
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 75 ஆக அதிகரித்து இருக்கிறது. நோயின் தீவிரத்தை விட அதிகமாக கொரோனா வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதைத் தடுக்கும் விதமாக இந்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவிற்கு எதிராக முதலில் செய்ய வேண்டியது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் கூட்ட வேண்டும் என மருத்துவர்கள் எடுத்துக்கூறி வருகின்றனர். கொரோனா போன்ற நோய்கள் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவை என்றாலும் உடனே உயிரைக் எடுத்துவிடும் தன்மை கொண்டது அல்ல. இவற்றிற்கான சிகிச்சையைப் பெற்று சீனாவில் பலர் வீடு திரும்பியிருக்கின்றனர்.
சீனாவில் இதுவரை பாதிக்கப் பட்டவர்களில் 70,387 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியால் சீனாவில் தனிமைப் படுத்தப் பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதுவரை நோயின் தீவிரத்தால் 4,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ்க்கு நோய் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. நோய் தடுப்பு மருந்துகள் இல்லாத நேரத்திலும் வைரஸ் நோயினால் ஏற்படும் பக்க நோய்களுக்கான மருந்தினைக் கொண்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப் படும். நோய் கிருமிகளை அழிப்பதற்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் பட்சத்தில் கொரோனாவில் இருந்து எளிதாகத் தப்பி விடலாம் என்பதே நிதர்சனம். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் உடல் நலம் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்திய விமான நிலையங்களில் நோய் அறிகுறி பற்றி சோதனை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 11,14,025. இதில் பேர் கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் 75 பேர். ஹரியாணாவில் 14 வெளிநாட்டு பயணிகள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. ராஜஸ்தானில் 2 வெளிநாட்டு பயணிகளும், உத்திர பிரதேசத்தில் ஒரு வெளிநாட்டு பயணியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், டெல்லியில் 6 பேர், கேரளாவில் 17 பேர், உத்திர பிரதேசத்தில் 10 பேர், லட்சத்தீவில் 3 பேர், கர்நாடகாவில் 5 பேர், மகாராஷ்டிரா 11 பேர் மற்றும் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. இவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பலரை இந்தியச் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் இந்திய சுகாதாரத் துறை கொரோனா பற்றிய அச்சத்தைப் போக்கவும், சந்தேகங்களை தீர்க்கவும் இலவச தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இந்திய மாநிலங்களுக்கும் தனித்தனியாக அம்மாநில மொழிகளில் இந்த சேவை உருவாக்கப் பட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்திற்கு கொரோனா உதவி எண் 044-29510500 என அறிவிக்கப் பட்டு இருக்கிறது.
இந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மக்கள் தங்களது சந்தேகங்களை எழுப்பலாம். மேலும், கொரோனா அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதை உடனடியாகத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப் பட்டு இருக்கிறது.