கொரோனா; அடுத்த 3 மாதங்களுக்கு ATMகளில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்!!!
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
கொரோனா பரவலைத் தடுக்க அடுத்த 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தி உத்தரவிட்டார். இந்நடைமுறை இரவு 12 மணிக்கு அமலுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் அனைத்துத் தொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்நேரத்தில் மக்களுக்கு சில அத்யாவசிய தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்ள மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
வங்கி சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதத்திற்கு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏ.டி.எம்களில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். முன்னதாக டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்களில் மட்டும் ஒரு மாதத்தில் 5 முறை சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்கும்போது அதற்குத் தனியாக சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வரும் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை குறைக்கும் பொருட்டும், பொதுமக்களை தொலைத்தூரத்திற்கு செல்லாமல் தடுக்கும் பொருட்டும் இத்தகைய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அனைத்து ஏ.டி.எம்களில் அடுத்த 3 மாதத்திற்கு சேவைக் கட்டணம் இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கும்போது மக்கள் தங்களது வீடுகளின் பக்கத்தில் உள்ள ஏ.டி.எம்களை தயக்கம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும். கொரோனா பரவலைத் தடுக்க இதுவும் ஒரு உக்தியாக இருக்கும் எனத் தற்போது இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும், தொழில் நிறுவனங்கள் தங்களின் வருமானவரி, ஜி.எஸ்.டி கணக்குத் தாக்கல்களை காலம் தாழ்த்தி ஜுன் 30 வரை செலுத்தலாம் என்ற அறிவிப்பும் நேற்று வெளியாகியது. காலம் தாழ்த்தி கணக்குத் தாக்கல் செய்யும்போது அதற்கான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது.