கொரோனா எதிரொலி; இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டிய கியூபா!!!

  • IndiaGlitz, [Monday,March 23 2020]


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி இந்நூற்றாண்டில் பெரிய எண்ணிக்கையிலான இழப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று அந்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்திய அளவைவிட தற்போது இத்தாலியில் அதிக தாக்கத்தைக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் 341,397 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. உயிரிழப்பு 14,746 ஆக உயர்ந்து இருக்கிறது. சீனாவில் இதுவரை 81,093 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 3270 ஆக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால் மிக சமீபத்தில் இத்தாலியில் பரவத் தொடங்கிய கொரோனா 5476 உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், 59,138 பேருக்கு நோய்தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நோய்பரவலின் விகிதத்தைக் கட்டுப்படுத்த இத்தாலி கடுமையான சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. ஆனாலும் பரவலின் விகிதத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத் துறை திணறி வருகிறது.

மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டால் இத்தாலி மிக அபாயகரமான இழப்புகளைச் சந்தித்து வருவதாக உலக நாடுகள் கவலைத் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கியூபாவில் இருந்து 52 மருத்துவர்களை கொண்ட ஒரு குழு இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.

வெனிசுலா, நிகாராகுவா, ஜமைக்கா, சுரிநேம், கிரிநடா போன்ற நாடுகள் மருத்துவர்களை அனுப்பி இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கும் நிலையில், புதிதாக கியூப மருத்துவக் குழு இத்தாலிக்கு விரைந்துள்ளது. விமானத்தின் மூலம் இத்தாலி சென்றடைந்த மருத்துவக்குழு கொரோனா நோய்த்தொற்றில் இருந்து அந்நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக நம்பிக்கையுடன் உற்சாகமாக களம் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.