கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!!

  • IndiaGlitz, [Friday,March 20 2020]

 


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 245,834 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றில் இருந்து 88,441 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். மேலும், 180 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 3 மாதங்களில் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி வந்திருக்கிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நிலைமை மோசமடைந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவின் பலி எண்ணிக்கையை இத்தாலி தாண்டி இருக்கிறது என்பது வருத்தத்தை தரும் விதத்தில் அமைகிறது.

நேற்றுவரை, அமெரிக்காவில் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டி இருக்கிறது. இம்மாதத் தொடக்கத்தில் வெறுமனே 100 எண்ணிக்கையில் இருந்த நோய் தொற்று அந்நாட்டில் தற்போது 10 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது. அந்நாட்டில் இன்னும் பலருக்கு நோய் தொற்று இருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் தற்போது சோதனை உபகரணங்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

சீனாவில் தற்போது புதிதாக பரவும் நோய் தொற்று விகிதம் பூஜ்ஜியமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களில் எந்த புதிய நோய் தொற்றும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சீனாவில் 71,150 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப் பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது.