மதுரையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி – ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- IndiaGlitz, [Friday,February 21 2020]
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் சீனா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த இருவருக்கும் கொரோனா பாதிப்பு குறித்து முதல் கட்ட மருத்துவச் சோதனைகள் நடத்தப் பட்ட பின்னரே தங்களது ஊருக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தனர்.
தங்களது வீடுகளுக்கு சென்ற இருவருக்கும் திங்கட்கிழமை அன்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஒருவேளை இது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் பட்ட நிலையில் நேற்று இரவு இருவரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
முன்னதாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தனி வார்டு அமைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. முழுமையாக தொற்று நோய் தடுப்பு ஆடைகள் போர்த்தப் பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உடல் பலகீனமான நிலையில் இவர்கள் இருவரையும் மருத்துவர்கள் தீவிர கண்காண்ப்பில் வைத்துள்ளனர். தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடத்தப் பட உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.