கொரோனா ஆறுதல்!!! பாதிக்கப்பட்ட 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர்!!! ICMR அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர் போன்ற காய்ச்சலை அனுபவிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தாங்களாகவே குணமடைகிறார்கள் என தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்து இருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசிய பால்ராம் பார்கவா, “நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதில் 80% பேர் கடும் குளிர்க்காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். எனினும் அவர்கள் குணமடைகிறார்கள். 20% பேர் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றை அதிகமாக அனுபவிக்கின்றனர். இதில் சிலரை மட்டுமே மருத்துவ மனைகளில் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது“ எனத் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனைகளில் 5% பேர் அனுமதிக்கப் பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சில நேரங்களில் புதிய மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகிறது” என்றும் கூறினார். இதுவரை நாடு முழுவதும் 15,000 முதல் 17,000 பேருக்கு கொரோனா பாதிப்பு குறித்த சோதனைகளை நடத்தியிருக்கிறோம். மேலும் ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு சோதனை நடத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள் எங்களிடம் இருக்கிறது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கொரோனா பரவலைத் தடுக்கக முதலில் மக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் காற்றில் பரவுவது இல்லை, அது பாதிக்கப்பட்டவர்களின் மூலம் நீர்த்துளிகளில் பரவுகிறது. எனவே பொதுமக்கள் இந்தப் பாதிப்பு சங்கிலியை தடை செய்ய வீட்டில் தனியாக இருப்பதை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியிருக்கிறது. மேலும், 9 உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் நோய் தொற்றில் இருந்து தாங்களாகவே மீண்டுவருகின்றனர் என இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்து இருப்பது மக்களிடையே சற்று ஆறுதலை வரவழைத்து இருக்கிறது.