குளுகுளு PPE kid … கல்லூரி மாணவரின் அசத்தும் கண்டுபிடிப்பு!
- IndiaGlitz, [Monday,May 24 2021]
கொரோனா நேரத்தில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர் PPE kid க்குள் புகுந்து கொண்டு கடும் வியர்வையிலும் வெப்பத்திலும் மணிக்கணக்காக நனைகின்றனர். மேலும் ஒருமுறை பயன்படுத்திய இந்த PPE உடைகளை மற்றொரு முறை பயன்படுத்த முடியாது என்பதால் நாள் முழுவதும் கழட்டாமல் இந்த PPE உடையை அணிந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த 19 வயதே ஆன கல்லூரி மாணவர் ஒருவர் தனது தாய்க்காக குளுகுளு PPE kidஐ உருவாக்கி இருக்கிறார். முதலில் மருத்துவரான தனது தாய் படும்பாடை பார்த்துவிட்டு இந்த குளுகுளு PPE kidஐ உருவாக்கிய அவர் தற்போது சுகாதாரப் பணியாளர்களின் நிலைமையை நினைத்து அதை சந்தைப்படுத்தவும் முன்வந்து இருக்கிறார்.
மும்பையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ். இவரின் தாய் பூனேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இவர் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பிய உடன் PPE உடையை அணிந்து கொள்கிறார். இதனால் கடும் வியர்வை, வெப்பம். இந்தக் கொடுமையை கடந்த ஒரு வருடமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிஹால் தனது தாய்க்காக மின்விசிறியோடு கூடிய ஒரு PPE kid ஐ உருவாக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.
இதற்காக வெளியில் உள்ள காற்றை வடிக்கட்டி அதை உடைக்கு உள்ளே ஈரப்பதத்துடன் செலுத்தும் வண்ணம் மின்விசிறியோடு சேர்த்து ஒரு PPE உடையை தயாரிக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளார். மேலும் காற்றிலும் கொரோனா வைரஸ் சுற்றித் திரியும் என்பதால் காற்றை வடிக்கட்டுவது குறித்து பூனே தேசிய வேதியியல் ஆராய்ச்சிக் கழகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்த உடையை தயாரித்து இருக்கிறார்.
இப்படி 6 மாத கடும் முயற்சிக்குப் பின் தற்போது நிஹாலின் Cool PPE kid பயன்பாட்டுக்கு வந்து இருக்கிறது. பல்வேறு சோதனைகளுக்குப் பின் ஒப்புதல் வாங்கப்பட்ட இந்த PPE kidஐ பூனேயில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யவும் முன்வந்துள்ளது. அதன்படி ஒரு PPE kidஇன் விலை ரூ.5,455 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தகக்து.
மேலும் இந்த உடையைப் போட்டுக் கொள்ளும்போது மின்விசிறிக்கு கீழே இருப்பது போன்ற உணர்வு ஏற்படுமாம். மேலும் ஒவ்வொரு 100 வினாடிகளுக்கு ஒரு முறை சுத்தமான காற்றை இதில் பொருத்தப்பட்ட மின்விசிறி உடைக்குள்ளே செலுத்துமாம். லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த மின்விசிறி PPE kid ஐ குறைந்தது 6-8 மணிநேரம் பயன்படுத்தலாம் என நிஹால் கூறியுள்ளார். நிஹாலின் இந்த முயற்சிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதிலும் வெப்பத்தில் வெந்து சாகும் சுகாதாரப் பணியாளர்கள் தற்போது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.