நடுரோட்டில் ரூ.2000 கோடி: மக்கள் குவிந்ததால் சென்னையில் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,October 26 2018]
ரூ.2000 கோடி ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சென்னையில் நடுரோட்டில் திடீரென பழுதாகி நின்றதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூரில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த கண்டெய்னர் நேற்றிரவு சென்னை அமைந்தகரை பகுதிக்கு வந்தபோது கியர் பாக்ஸில் ஏற்பட்ட பழுது காரணமாக திடீரென நின்றது.
சுமார் ரூ.2000 கோடி பணத்துடன் நடுரோட்டில் கண்டெய்னர் லாரி நின்ற செய்தி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கண்டெய்னர் லாரி அருகே குவிந்தனர். உடனடியாக இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை கண்டெய்னரை பாதுகாக்க அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது
ரிசர்வ் வாங்கி பாதுகாவலர்களும், காவல்துறையினர்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் உடனடியாக பணம் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரை யாரும் நெருங்கிவிடாமல் கண்காணிப்பாக இருந்ததால் கண்டெய்னரில் இருந்த பணம் தப்பியது. அதன்பின்னர் கண்டெய்னர் லாரி பழுது நீக்கப்பட்டு ரிசர்வ்வங்கி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அமைந்தகரை பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.