அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஸ்டாலினால் மதுரையில் கால் வைக்க முடிகிறது- முதல்வர் பழனிசாமி கருத்து!

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மு.க.ஸ்டாலினே மதுரைக்குள் வர முடிகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்து உள்ளார். மதுரையில் நேற்று புறநகர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், பழங்காநத்தம், முனிச்சாலை உள்ளிட்ட இடங்களில் பேசினார்.

அப்போசிய பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஸ்டாலினே மதுரைக்குள் வர முடிந்தது. திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்தும் கூட, அவரால் மதுரையில் கால் வைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ரவுடிகள் அராஜகம் மதுரையில் இருந்தது. தற்போது மதுரையை அதிமுக அமைதிப் பூங்காவாக வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 2006 முதல் 2011 ஆண்டுவரை நடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் இருண்ட ஆட்சி நடந்தது” எனப் பேசினார்.

மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் அங்குள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்கள் மத்தியில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தப் பிரச்சாரக் கூட்டங்களில் மதுரைக்கு போக்குவரத்து மற்றும் மருத்துவப் பல்கலைக் கழகம் கொண்டு வந்தது குறித்தும், ஏழை, எளிய மக்களின் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது குறித்தும், அதோடு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தியது குறித்தும் மக்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.