தியேட்டர்களுக்கு விடிவுகாலம்… பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்பு வழிமுறைகளையும் தற்போது மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. கொரோனா பரவல் தடுப்புக்காக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் பொருளாதாரக் காரணிகள், மக்களின் இயல்பு வாழ்க்கை போன்றவற்றிற்காக ஊரடங்கு விதிமுறைகளில் தொடர்ந்து தளர்வு கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்ட பிறகும் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இச்செய்தி சினிமா ரசிகர்களிடையே கடும் வரவேற்பை பெறும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் திரையரங்கங்களின் திறப்புக்கு மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது. அதில்,
“திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.
மொத்த இருக்கையில் 50% பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் பார்வையாளர்கள் முகக்கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். ஒரேயொரு திரை மட்டுமேயுள்ள திரையரங்குகள் டிக்கெட் கவுண்டர்களை திறந்து கொள்ளலாம். ஆனாலும் ஆன்லைன் புக்கிங் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. தியேட்டருக்குள் காற்றோட்ட வசதி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். அனைத்து குளிரூட்டப்பட்ட திரையரங்குகளும் அரங்கினுள் 23 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்ப நிலையை பராமரிப்பது அவசியம்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தியேட்டர் திறப்பது குறித்த பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டாலும் திறக்கப்படும் தேதியை முன்பே அறிவித்து விட்டது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்ட அன்லாக் வழிகாட்டுதல்களில் வரும் அக்டோபர் 15 முதல் இந்தியாவில் திரையரங்குகளைத் திறக்கலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout