அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- IndiaGlitz, [Thursday,March 11 2021]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. அந்த வகையில் இத்தடுப்பூசி முதற்கட்டமாக மருத்துவக் களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. அடுத்து 60-45 வயதுக்கு மேலுள்ள நீரிழிவு இதய நோய் உள்ளிட்ட இணைநோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதையடுத்து பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றம் பிற மாநில முதல்வர்களும் விஜபிகளும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் தமிழகத்தில் கொரோனா ஒழிப்புக்கான அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.