கொரோனாவை கையாள தனி ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர்!!! அடுத்த அதிரடி!!!
- IndiaGlitz, [Wednesday,September 02 2020]
இந்திய அளவில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பெருமையுடன் தெரிவித்து இருந்தார். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்து இருந்தது. அதைத்தவிர தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ நெறிமுறைகளினால் தற்போது குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாக தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் ஏராளமான தளர்வுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இன்னொரு பக்கம் கொரோனா நோய்த்தொற்றும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஏற்படும் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டிய நிலையிலேயே இருக்கிறது. இதனால் நிலைமையை சமாளிக்க மேலும் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். அதன்படி கொரோனா சிகிச்சைக்கு என தனியாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள், அரசு மருத்துவ மனைகளில் உள்ள அரசு ரத்த வங்கிகளின் சேவைக்கான 10 ரத்ததான ஊர்திகள் மற்றும் தமிழ்நாட்டில் கோவிட் -19 கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் எண்டர் பிரைசஸ் லிமிடெட் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும்,118 ஆம்புலன்ஸ் வாகனங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் அந்த வாகனத்திற்குள் ஏறி அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.