கோழி, முட்டைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம்; அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!!!
- IndiaGlitz, [Wednesday,March 18 2020]
நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கோழி மற்றும் இறைச்சி பொருட்களின் விற்பனை சரிந்து வருவதாகக் கூறப்பட்டது. தெலுங்கானாவில் கோழிகளின் விற்பனை சரிந்த நிலையில் பல இலவசப் பொருட்களைக் கொடுத்து பல கடைக்காரர்கள் விற்பனையை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கடந்த வாரங்களில் நாமக்கல் மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வதந்திகள் சமூக வலைத் தலங்களில் பரவியது. இப்படியான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தமிழக அரசு எச்சரித்த நிலையில் கரூர் பகுதியைச் சார்ந்த ஒருவர் கைதும் செய்யப் பட்டார்.
தற்போது, தமிழகச் சட்டப் பேரவையிலும் இது குறித்த விவாதம் நடத்தப் பட்டது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், கோழி மூலம் கொரோனா பரவும் என்கிற ரீதியில் வதந்திகள் பரவி வருகின்றன. எனவே நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என பேசினார்.
இதற்குப் பதில் அளித்த கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் கோழி மூலம் எந்தவித கொரோனாவும் பரவுவதில்லை எனத் தெரிய வந்துள்ளது. எனவே கோழி மற்றும் முட்டைகளைத் தாராளமாக உண்ணலாம் எனவும் தெரிவித்தார். மேலும், கோழி பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் நம்பிக்கை அளித்து பேசினார்.