இனி 8 போடாமலே டிரைவிங் லைசென்ஸ் வாங்கலாம்… புதிய வரைவு சட்டத்தின் விளக்கம்!
- IndiaGlitz, [Monday,February 08 2021]
டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் எல்எல்ஆர் பதிவு செய்து, அதற்கு பின்பு ஆர்டிஓ அதிகாரிக்கு முன்னால் 8 போட்டு காண்பித்த பிறகே லைசென்ஸ் வாங்க முடியும். இந்த நடைமுறையினால் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த விதிமுறையை எளிமையாக்க வேண்டும் என்பதற்காகப் புதிய வரைவு அறிக்கை ஒன்று கொண்டு வரப்பட உள்ளது.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கொண்டு வரப்பட்டு உள்ள புதிய வரைவு அறிக்கையின் படி இனிமேல் டிரைவிங் லைலென்ஸ் வாங்குவதற்கு ஒவ்வொருவரும் அங்கீகரிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் பயிற்சி மையத்தில் முறையான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் ஒவ்வொரு நபரும் நன்றாக வாகனம் ஓட்ட முடியும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனால் இனிமேல் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. முறையான வாகன ஓட்டுநர் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சியை எடுத்துக் கொண்டால் அவர்களாகவே ஓட்டுநர் உரிமத்தை பெற்று தந்து விடுவர். வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது.