சுயஇன்பம் செய்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடுமா? மருத்துவரின் பதில்!
- IndiaGlitz, [Monday,July 05 2021]
கொரோனா வைரஸ் உலகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கொடிய நோய்த்தொற்றாக பரவிவருகிறது. இதன் தீவிரத்தன்மை காரணமாக இந்நோயை தடுப்பதற்கு ஒவ்வொருவரும் முயற்சித்து வருகிறோம். இதனால் ஏதோ ஒரு வகையில் எல்லோரும் அரை மருத்துவராகவே மாறிவிட்டோம்.
இதைத்தவிர எல்லா சமூக வலைத்தளங்களிலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை கூட்டுவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவது என வெறும் மருத்துவக் குறிப்புகளாக குவிந்து கிடக்கின்றன. இதில் எது உண்மை என்றுகூட தெரியாத அளவிற்கு தற்போது நிலைமை படு மோசமாக மாறிவிட்டது. இந்நிலையில் சுயஇன்பம் செய்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடும் என்பது போன்ற ஒரு கருத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் மருத்துவர்கள் இந்தக் கருத்தில் துளியும் உண்மையில்லை எனத் தெரிவித்து உள்ளனர். மேலும் ஆண்கள் பாலியல் தூண்டலுக்கு ஆளாகும்போதோ அல்லது பாலுறவு உச்ச நிலையிலோ அவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவ உலகம் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இந்த ரத்த வெள்ளை அணுக்கள் ஒருநபரை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்ற உதவாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா நேரத்தில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அந்த வகையில் மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்பதற்கு இந்த சுயஇன்பம் ஒருவேளை உதவலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆங்கில மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் கூட சுயஇன்பம் குறித்து தவறான சில கருத்துக்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஆண்களின் விந்து ஆரோக்கியத்துக்கு சுயஇன்பம் உதவுகிறது என்பதை மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் எனும் புற்றுநோய் ஆபத்தும் இந்தப் பழக்கத்தால் குறைந்து போவதும் தெரியவந்துள்ளது.
ஒருகாலத்தில் சுயஇன்பம் செய்வதால் வெளியாகும் ஒரு அவுன்ஸ் 28(மி) விந்து இழப்பு 40 அவுன்ஸ் அதாவது 1.18 லிட்டர் ரத்தப் போக்கினால் எற்படும் பாதிப்புக்கு ஈடானது என மருத்தவர்கள் நம்பி வந்தனர். ஏன் விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட 19 ஆம் நூற்றாண்டில் கூட நரம்புத் தளர்ச்சி, பார்வை இழப்பு என சுயஇன்பத்தால் பல கேடுகள் வரும் எனவும் சிலர் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால் இந்தக் கருத்தை தற்போதைய மருத்துவ உகலம் மறுத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.