தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்குமா??? மருத்துவர்களின் அறிவுரை!!!

  • IndiaGlitz, [Thursday,March 26 2020]


கொரோனா வைரஸ் பொருட்களின் மேல் தங்கிவாழும் தன்மையுடையது என்ற அறிக்கை வெளியானதில் இருந்து எந்தப்பொருட்களில் எவ்வளவு நேரம் தங்குமோ என்பதைக் குறித்து மக்கள் கடும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். பொருட்களைத் தொடலாமா? வேண்டாமா? எப்படி பொருட்களைக் கையாள்வது எனப் பலவித சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிலப் பொருட்களின் மேல் கொரோனா வைரஸ் தங்கி வாழும் தன்மையுடையது எனத் தெரிவித்தது. மேலும், எந்தப்பொருட்களில் எவ்வளவு நேரம் தங்கிவாழும் என்பதை, ஆராய்ச்சியாளர்களும் நிபுணர்களும் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். பொருட்களின் மேற்பரப்பு தன்மையைப் பொறுத்து கொரோனா வைரஸ் நாள் கணக்காக வாழும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். எஃகு, பிளாஸ்டிக் பொருட்களின்மீது கொரோனா வைரஸ் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரையிலும் தங்கிவாழும் தன்மையைக் கொண்டிருக்குமாம்.

தற்போது, தலைமுடியில் கொரோனா வைரஸ் தங்கிவாழும் தன்மையுடையதா? என்பது குறித்து சந்தேகம் எழுப்பப் பட்டு இருக்கிறது. Yale Institute மருத்துவர் Dr. Saad Omer கொரோனா பரவலுக்கு இடையில், தலைமுடியில் வைரஸ் பரவுமா என்பதைக் குறித்து எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை எனத் தெரிவித்தார். ஆனால், தலைமுடியின் மேற்பரப்பில் தங்கும் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர்வாழாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், துருப்பிடிக்காத எஃகு போன்ற கடினமான பொருட்களைவிட மென்மையான முடி போன்ற பொருட்களில் தங்கிவாழும் கொரோனா வைரஸ் குறைந்த கால அளவில் இறந்துவிடும் தன்மைக்கொண்டது எனவும் குறிப்பிட்டார்.

Washington Medicine and Health Sciences மருத்துவர் Dr. Adam Friedman இது சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் எனத் தெரிவித்துள்ளார். உங்களது முடி கீழேவிழும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் அந்த முடியின்மீது தும்மும்போது குறைந்தது 3 நாட்களுக்கு அந்த வைரஸ் சாகாமல் உயிர்வாழக்கூடும். தலையில் இருக்கும்போது நிலைமை வேறாகவும் இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.

தலைமுடியில் தங்கி வாழும் அளவிற்கு கொரோனா வைரஸ் ஆற்றல் கொண்டது இல்லை என்றாலும் பாதுகாப்பான சூழ்நிலையில் உங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் தற்போது அறிவுரை கூறிவருகின்றனர்.