கொரோனாவை பரப்பிய பாடகி மீது வழக்கு: போலீஸார் அதிரடி
- IndiaGlitz, [Saturday,March 21 2020]
லக்னோவில் நேற்று ஒருநாள் மட்டும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. அதில் பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இம்மாதம் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியவரை விமான நிலையத்தில் மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது கொரோனா இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டு இருக்கிறது.
பாடகி கனிகா கபூர் இந்தியாவிற்கு வந்த பிறகு மூன்று பெரிய கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பல பிரபல நட்சத்திரங்களும் வந்திருந்தனர். கனிகா கபூருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பலர் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை மீறி பல பார்டிகளில் கலந்து கொண்டதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் கனிகா கபூர் வசிக்கும் மஹாநகர் குடியிருப்பு பகுதிகளை முடக்க அம்மாநில சுகாதாரத் துறை முடிவு செய்து இருக்கிறது. மக்கள் எக்காரணங்களைக் கொண்டும் வெளியே வரவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. மஹாநகர் பகுதியில் பல முக்கிய பிரபலங்களும் வசித்து வருவதால் பரபரப்பு தொற்றி கொண்டிருக்கிறது.
மேலும், முன்னாள் அமைச்சர் அக்பர் அஹமது டம்பியின் வீட்டில் நடந்த பார்டி ஒன்றிலும் பாடகி கனிகா கலந்து கொண்டார். இந்த பார்டிக்கு பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கனிகா கலந்து கொண்ட பார்டிகளில் இருந்தவர்கள் தற்போது அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். எனவே கனிகாவுடன் தொடர்புடைய அனைவருக்கும் நோய் தொற்று குறித்து சோதனை செய்ய அம்மாநில சுகாதாரத்துறை முடிவு செய்து இருக்கிறது.
மேலும், மத்தியப் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்பாடு செய்த ஏற்பாடு செய்த நிகழ்விலும் கலந்துகொண்டார். அதனால் இந்த விவகாரத் தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி பொது நிகழ்வில் கலந்து கொண்ட பாடகி கனிகா கபூர் மீது லக்னோ காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.