ஒரே மாநிலத்தில் 8,000 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று… பகீர் தகவல்!

கொரோனாவினால் ஏற்படும் இணை நோய்களில் ஒன்றான கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மகாராஷ்டிராவில் தற்போது 8,000 பேருக்கு இந்தக் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

கடந்த ஜுன் 19 ஆம் தேதி வரை மகாராஷ்டிராவில் மட்டும் 7,998 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்களில் 729 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 4,398 பேர் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது மியூகோர்மைசிஸ் எனும் பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை என கலர் கலராக பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் இதனால் ஆம்போடெரிசின் மருந்தை அதிகளவில் வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.