close
Choose your channels

பயங்கரவாதத்தின் மத்தியில் மலர்ந்த ஜனநாயகக் குரல் பெனாசிர் பூட்டோ!!!

Thursday, March 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

பயங்கரவாதத்தின் மத்தியில் மலர்ந்த ஜனநாயகக் குரல் பெனாசிர் பூட்டோ


“ஒருநாள் கண்டிப்பாக சுட்டுக் கொல்லப் படுவோம்“ எனத் தெரிந்தே அரசியலில் பங்கேற்று, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான ஒரு இஸ்லாமிய பெண் ஜனநாயகவாதி பெனாசிர் பூட்டோ. 

இஸ்லாமிய நாடுகளில் முதல் பெண் பிரதமர்;  பழமைவாதக் கருத்துகளுக்கு மத்தியில் ஜனநாயகத்துக்கான ஏக்கத்தைக் கொண்டிருந்தவர். தனது ஒட்டு மொத்த வாழ்க்கையையுமே போராட்டமும் சர்ச்சைகளுமாகக் கடந்து சென்றவர். இறுதியாக குண்டுகளால் துளைக்கப் பட்டு உலகையே அதிர வைத்தவர். இந்த ஒரு மனுஷியின் வாழ்க்கைக்குப் பின்னால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அரசியல் வரலாறு அடங்கியிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.

மதத்தின் அடிப்படையில் இந்திய வரைபடத்தில் இருந்து பிரிந்த சென்ற பாகிஸ்தான் தனது அரசியல் வரலாற்றில் ஒருநாளும் ஏறுமுகத்தைப் பார்க்கவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது. அந்நாட்டிற்கு மட்டும் இரண்டு தலைநகரங்கள். ஒன்று இஸ்லாமாபாத். இன்னொன்று பெஷாவர். இஸ்லாமாபாத்தில் ஒரு அரசியல் முடிவு எட்டப்படும் நிலையில் அது பெஷாவரின் கண்களை உறுத்தாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இஸ்லாமாபாத் இராணுவக் கட்டளைகளை மீறினால் அடுத்த நாளே அந்நாட்டில் இராணுவ ஆட்சி நடைமுறையில் இருக்கும்.

கூடவே, தீவிரவாதத்தின் கூடாரம் என்று உலக நாடுகள் அனைத்தும் விமர்சித்து வந்த நிலையில், பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கான ஒரு துளிர் கூட முளைக்கவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஒவ்வொரு முறையும் மாட்டிக்கொண்ட பாகிஸ்தானில் நடுநடுவே பொதுத் தேர்தல்களும் நடைபெறும். இந்தப் பொதுத்தேர்களில் வெற்றிப் பெற்றவர்கள் கடுமையான போராட்டங்களுக்கு இடையில் தங்களது ஆட்சியைத் தொடர வேண்டி இருக்கும். இராணுவத்தின் தலையீட்டில் சிக்கிக் கொள்ளாமல் தங்களது ஆட்சியை காப்பாற்ற வேண்டிய கடமையும் பிரதமருடையது. தற்போது வரை பாகிஸ்தானின் அரசியல் நிலவரங்கள் இப்படித்தான் தொடர்கின்றன. 

அந்நாட்டில் கடுமையான பயங்கரவாதத்துக்கு மத்தியில், ஜனநாயகத்துக்கான ஒரு துளிர் பெனாசீர் பூட்டோவின் வடிவில் முளை விடுகிறது. துளிர் விட்டு அரும்பிய அந்த இளம் கருத்தியல் வடிவத்தினை வேர்பரப்ப விடாமல் சிறிது காலத்திலேயே துப்பாக்கி குண்டால் துளைக்கிறது அந்நாட்டு பயங்கரவாதம். இதை பெனாசிரும் ஒருநாள் இப்படித்தான் இறந்துபோவோம் என்று தெரிந்தே வைத்திருந்தார். தெரிந்தே பயங்கரவாதத்துக்கு மத்தியில் தனது போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

பெனாசிரின் குடும்பமே மிகப்பெரிய அரசியல் வலிமை பெற்றிருந்ததால் அரசியல் அவரை மிக எளிதாக வரவேற்றுக் கொண்டது. அவரின் தந்தை வழி குடும்பத்தினர் இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிந்து தனி மாகாணமாக உதயமான போது அவரது தாத்தா சர் ஷா நவாஜ் பூட்டோ 1936 இல் சிந்துவின் முதல் ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 1937 இல் ஆயிஷ் அப்துல் ஹருண் ஆரம்பித்த கட்சியின் துணை தலைவராகப் பொறுப்பு வகித்தார். இப்படியான குடும்ப பின்னணியில் ஷா நவாஜின் மகன் சுல்ஃபிகர் அலியும் பாகிஸ்தானில் ஒரு வலிமையான அரசியல்வாதியாக உருவெடுத்தார். 

பின்னாட்களில் பாகிஸ்தானின் இடது மக்களின் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று சுல்ஃபிகர் அலி, அந்நாட்டின் அசைக்க முடியாத ஒரு அரசியல் தலைவராகவே வலம் வந்தார். 1971 இல் குடியரசு தலைவர், பின்பு பிரதமர் என்று சுல்ஃபிகர் அலியின் அரசியலுக்கு அந்நாட்டு மக்கள் அமோக ஆதரவை அளித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சுல்ஃபிகர் அலி சீனாவுக்கு ஆதரவாக பல செயல்களைச் செய்தபடியே இந்தியாவுடன் நட்புடன் இருந்து வந்தார். துரோகத்தின் சதியில் மாட்டிக் கொண்ட அவர் கடையில் தூக்கு மேடையைத் தழுவுகிறார். இக்காட்சியைக் கண்டு உலகமே அதிர்ந்து போகிறது. பிரதமர் பதவி வகித்த ஒருவர் தூக்கிலப் படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. 

ஒரு வலிமையான அரசியல் குடும்பம், அந்நாட்டு இராணுவம் மற்றும் பயங்கரவாத்திற்கு இரையாகிறது. இது ஜானநாயகத்தின் வீழ்ச்சி என்றே அரசியல் மட்டங்கள் விமர்சிக்கின்றன. தந்தை சுல்ஃபிக்கார் அலி தூக்கிலடப் படுகிறார். இரு சகோதரர்கள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர். இப்படி பெனாசிர் அனுபவித்த வலிகளைத் தாண்டி எழுந்து வருவதற்கு எந்த நோக்கமும் இல்லாமல் இருந்த அவர், அரசியலில் நுழைந்தது ஒரு விசித்திரம் என்றே சொல்ல வேண்டும். சில சமரசங்களுக்காக அவர் விமர்சிக்கப் பட்டாலும் அரசியல் மரபில் பெனாசிர் தனித்தே விளங்கினார் என்ற இயல்புக்காக உலகம் அவரை இன்றும் நினைவு கூரத்தான் செய்கிறது. 

பெனாசிர் பூட்டோ தொடக்கக் காலம்
சுல்ஃபிக்கார் அலி பூட்டோ, பேகம் நஸ்ரத் பூட்டோ தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தவர்தான் பெனாசீர் பூட்டோ. பெனாசீர் என்றால் ஈடு இணையற்றவர் என்று பொருள். பாகிஸ்தானில் தனது பள்ளி படிப்பை முடித்த பெனாசிர் ஹார்டுவேர்,  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் தனது மேற்படிப்பை முடித்தார். அரசியல், பொருளாதாரம், சட்டம் போன்ற துறைகளில் தேர்ந்த அறிஞராகவே திகழ்ந்தார் பெனாசிர். 

இவரின் அறிவுத் திறமைக்கு கிடைத்த பரிசாக 1976 டிசம்பரில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தப் பதவியில் இருந்த முதல் ஆசியப் பெண் இவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத் தக்கது. 

தனது படிப்பை முடித்து கொண்டு பாகிஸ்தானுக்கு திரும்பிய பெனாசிருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவரின் தந்தை கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு தூக்கிலடப் படுகிறார். சகோதரர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப் படுகின்றனர். பொனாசிர் குடும்பம் வீட்டுச் சிறையில் அடைக்கப் படுகிறது.

பெனாசிரின் வீட்டு சிறை குறித்து உலக நாடுகள் அனைத்தும் விமர்சிக்கின்றன. ஆனாலும் அவர்களது வீட்டுச் சிறை இராணுவத்தால் அதிகப் படுத்தப் படுகிறது. உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு பிறகு 1984 இல் வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப் படுகிறார். அதுவரை பெனாசிர் ஒருபோதும் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. 

1987 இல் ஆசிஃப் அலி ஜர்தாரியை மணந்து கொள்கிறார் பெனாசிர். பிலாவால், பக்த்வார், ஆசீஃபா ஆகிய குழந்தைகளுக்குத் தாயாகிறார். பாகிஸ்தானில் நடந்த கொடுமையான இராணுவக் கட்டுப்பாடுகள் அவரை அரசியல் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. சட்டம், பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் ஆழ்ந்த புலமைப் பெற்ற பெனாசிர் அரசியலுக்கு சட்டெனப் பொருந்தி போகிற ஆளுமையாக மாறுகிறார்.

பெரும் மக்களின் ஆதரவோடு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று கொள்கிறார். ஒரு பெண்ணாகவும் சூல்ஃபிகர் அலியின் மகளாகவும் அறியப்படுகிற பெனாசிர் அரசியல் மட்டத்தில் ஜனநாயகக் கருத்துக்களை முதன் முதலாக அந்நாட்டில் பேச ஆரம்பிக்கிறார். இவர் உதிக்கும் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கிறது. 

மக்களின் ஆதரவு பெருகி கொண்டே இருக்கும் ஒரு பெரிய தலைவரைக் கூட அந்நாட்டு இராணுவம் எளிதாக வீட்டுக் அனுப்பிவிடும் வல்லமைக் கொண்டது. இத்தகைய அரசியல் நெருக்கடிக்களுக்கு இடையில் பலமான ஒரு பெண் ஆளுமையாக தன்னை வலுப்படுத்திக் கொள்கிறார் பெனாசிர். 

1988 இல் பொதுத்தேர்தல். பிரதமர் வேட்பாளராக பெனாசிர் அறிவிக்கப் பட்டு, போட்டியிட்டு அபாரமான வெற்றி பெறுகிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. 35 வயதில் ஒரு இஸ்லாமிய பெண் பிரதமராகிறார். உலகமே இஸ்லாத்தின் “முகல் ரோஜா“ என்று கொண்டாடுகிறது. பதவி ஏற்றவுடன் பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்களைக் கொண்டு வருகிறார் பெனாசிர். பதவியேற்ற 20 மாதங்களிலேயே பெனாசிரின் ஆட்சி கலைக்கப் படுகிறது. 

பின்னர், 1993 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கேற்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறார். முன்னேற்றக் கொள்கை, கல்வி , மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை போன்ற நடவடிக்கைகளுக்காக பெனாசிர்  மக்களின் மத்தியில் பெரும் ஆதரவைப் பெறுகிறார். இந்த முறையும் இராணுவத்தின் நெருக்கடி 1996 இல் ஆட்சி கலைக்கப் படுகிறது. பெனாசிர் கணவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. பழமைவாதமும் மத வாதமும் குடிகொண்ட ஒரு நாட்டில் குற்றங்களின் அடிப்படைகளை உணர்ந்து கொள்ள முயல்வது ஒரு கடினமான விடயமே. 

பின்னர், சொந்த காரணங்களுக்காக துபாயில் தங்கி வாழத் தொடங்குகிறார் பெனாசிர். லண்டனில் 8 ஆண்டுகள் இருந்த பின்பு மீண்டும் பாகிஸ்தானுக்கு வர முற்படுகிறார். மக்கள் அவருக்கு பெருத்த வரவேற்பை தருகின்றனர். எனவே 2008 இல் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பங்கு கொள்ள முடிவு எடுக்கிறார்.

பாகிஸ்தான் திரும்பிய பெனாசிர் மீது 8 முறை தற்கொலை படை தாக்குதல் நடத்தப் படுகின்றன. பல நேரங்களில் நேரடியான கொலை முயற்சிகளும் தொடருகிறது. இதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காத பெனாசிர் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என கடுமையான பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். 

பாகிஸ்தானில் இரு முறை பிரதமாராகவும் ஒரு கட்சியின் தலைவராகவும் இருந்த ஒருவருக்கு ஆட்சியில் இருந்த முஷாரப் அரசு பாதுகாப்பு தர மறுக்கிறது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது அந்நாட்டு பாதுகாப்பு துறைக்குத் தெரிந்தும் அவருக்கு எச்சரிக்கை அளிக்கப் படவில்லை. 

“இந்த நாட்டிற்கு தர என்னிடம் என்ன இருக்கிறது? என் உயிரைத் தவிர!!!” என்று சொன்ன ஒரு பெண் தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்படுகிறார். ராவல் பிண்டியில் 2007 டிசம்பர் 27 இல் மக்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசத் தொடங்குகிறார். குண்டுகள் துளைக்காத காரில் இருந்து தன் கைகளை உயர்த்தியவாறே மக்களை நோக்கி கைகளை அசைக்கிறார். 

கண நேரத்தில் காருக்கு அருகில் ஒரு வெடிகுண்டு வெடித்து சிதறுகிறது. கூடவே பெனாசீர் உடலை சில குண்டுகள் பதம் பார்க்கின்றன. இரத்த வெள்ளத்தில் மிதக்கிறார் பெனாசிர். இவரது மரணச் செய்தியைக் கேட்டு உலக நாடுகளே அதிர்ந்து போகின்றன. 

முகல் ரோஜாவின் வருகையால் மகிழ்ந்திருப்பதாக தெரிவித்த உலக நாடுகள் இவரது படுகொலைக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கின்றன. முஷராப் அரசுக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவிக்கிறது. அதுவரை பெனாசிர் படுகொலை குறித்து கருத்து தெரிவிக்காத அரசு பின்னர் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவரது கொலைக்கு தாலிபான் அமைப்பே காரணம் எனவும் அறிக்கை விடுகிறார் முஷாரப். இந்த அறிவிப்பில் இருந்த குளறுபடுகள் இன்றைக்கு வரைக்கும் தொடருக்கின்றன. 

முஷாரப் தாலிபான் அமைப்பு மீது குற்றம் சாட்டிய நிலையில் தாலிபான் அதை முதலில் மறுக்கிறது. 2013 இல் பெனாசீர் கொலை வழக்கில் முஷாரப்பின் தலையீடு இருக்கிறது என ஒரு வழக்கும் தொடரப்படுகிறது. இந்தக் குற்றச் சாட்டை முஷாரப் மறுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 2017 வரை பெனாசிர் படுகொலைக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. 

பெனாசிர் இறப்பு குறித்து மர்மங்கள் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தாலிபான் அமைப்பு உரிமை கோரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. உருது மொழியில் எழுதப்பட்ட “பிரித்தானிய ராஷ்யம் முதல் அமெரிக்க ஏகாதிபத்தியம் வரை” என்ற நூலில் தாலிபான் அமைப்பு இதை உறுதி செய்தது. கொலையாளிகளின் பெயர்களும் இதில் வெளியிடப் பட்டன. நீதிமன்றம் கொலையில் சம்பந்தப் பட்டதற்காக சிலரை சிறையில் அடைக்கிறது. 

பினனாளில் பெனாசிர் பூட்டோவுக்கு ஐ.நா. சபை இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இவரது குடும்பத்தில் ஒரு இயற்கை மரணம் கூட நிகழவில்லை என்பதே கொடூரத்தின் உச்சமாகக் கருதப் படுகிறது.  தந்தை, சகோதரர்கள், பெனாசீர், பெனாசிர் படுகொலைக்கு வழக்காடிய வழக்கறிஞர் என அனைவரும் சுடப்பட்டே இறக்கின்றனர்.

தனது பதவிகாலம் முழுவதும் இந்தியாவுடன் நட்புக் கரம் நீட்டி வந்தவர் பெனாசிர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒரு அம்சமாகும். எப்போதும் தன் வாழ்நாளில் வெளிப்படையான நடவடிக்கைகளை கொண்டிருந்தார் என்பதற்காகப் பலரது பாராட்டுகளையும் பெற்றார். 

பொருளாதார சீர்திருத்தம் , தாராள மயமாக்கம், தனியார் மயமாக்கம் போன்ற கொள்கைகள் பாகிஸ்தான் மண்ணில் அறியப்பட்டதற்கு பெனாசிர்தான் காரணமாக இருந்தார். பாகிஸ்தானில் ஒரு வலிமையான ஜனநாயகத்தை கட்டமைக்க கடுமையாக முயற்சி செய்தார். அவரது மறைவு பாகிஸ்தானின் அரசியலில் பெருத்த வெற்றிடத்தையே ஏற்படுத்தி விட்டது. மேலும், ஜனநாயகத்தின் சுதந்திர காற்றை அனுபவித்து விட மாட்டோமா? என எதிர்பார்த்த மக்களின் வாழ்வியலில் கனத்த நெருடலை பெனாசிர் ஏற்படுத்தி விட்டார். 

இராணுவம், பயங்கரவாதம், ஊழல் குற்றச்சாட்டுகள் என நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு தேர்ந்த போராளியாக இருந்த பெனாசிர் ஒரு பெண் நம்பிக்கை நட்சத்திரமாக இஸ்லாமிய பெண்களின் மத்தியில் இன்றைக்கு வரைக்கும் உலா வருகிறார். முகல் ரோஜாவின் மென்மையான கருத்தியலில் ஜனநாயகத்தை பார்த்து விடலாம் என ஏங்கிய பாகிஸ்தானின் துப்பாக்கிகள் இன்றைக்கு வரைக்கும் விடுதலை பெறாமலே இருக்கின்றன என்ற இடத்தில் பெனாசிர் முக்கியத்துவம் பெற்றவராகிறார். 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment