கோவையில் கொரோனா அதிகரிப்பு...! பரவலுக்கு தனியார் தொழிற்சாலைகள் காரணமா..?
- IndiaGlitz, [Sunday,May 30 2021]
கோவையில் ஊரடங்கு விதிகளை மீறி தனியார் தொழிற்சாலைகள் இயங்குவது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். ஆனால் வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால் சென்னையை பின்னுக்கு தள்ளி, கோவையில் தினசரி பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் சுமார் 3692 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
கோவையில் மக்கள் ஊரடங்கை பின்பற்றி வீட்டிற்குள் இருந்து வந்தாலும், குறிப்பிட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கோவையின் புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் ரகசியமாக சில நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக தொழிலாளர்களே புகார்கள் தெரிவிக்கின்றனர். அரசூர்,தெக்கலூர், கருமத்தம்பட்டி மற்றும் நீலாம்பூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டுவருவதாக, தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
நீலாம்பூரில் உள்ள சாம் டர்போ இண்டஸ்ட்ரீஸ், கிராப்ட்ஸ் மென் தொழிற்சாலை மற்றும் லட்சமி மெஷின் ஒர்க்ஸ் உள்ளிட்ட தொழிற்சாலைகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் எந்த தடையில்லாமல் இயல்பாக இயங்கிவருகிறது. இந்த தனியார் தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தின் பேருந்துகள் மூலமாக, தொழிலாளர்களை சமூக இடைவெளி இல்லாமல் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதனால் கொரோனா பரவும் அபாயமும், அங்கு பணிபுரிந்தவர்கள் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. இதேபோல் சோமனுர் உள்ளிட்ட ஊர்களின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விசைத்தறிகள், 2 தொழிலாளர்களை வைத்து இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஊரடங்கை மீறி செயல்படும் நிறுவனங்களின் முதலாளிகளை, அரசு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். தொழிலாளர்களின் நலன் கருதி செயல்பட்டு வரும் நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பாக எதிர்பார்க்கப்படுகிறது.