ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு கழிவுகள் வெளியாகி அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தூத்துக்குடியில் கடந்த 2018 மே-22 ஆம் தேதி பொதுமக்கள் திரளாகக்கூடி ஆலையில் வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. போராட்டத்தில் வன்முறை வெடித்தால் இச்சம்பவம் நடைபெற்றதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு தடைவித்து கடந்த 2018, மே 28 ஆம் தேதி அரசு சார்பில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேதாந்த நிறுவனத்தின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கிற்கான தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியது. தீர்ப்பில் தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. தமிழக அரசின் ஆணை தொடரும் என நீதிபதிகள் தீர்ப்பளித்து இருந்தனர். இத்தீர்ப்பை 2 வாரம் நிறுத்தி வைக்குமாறு வேதாந்த நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த கோரிக்கைக்கு விளக்க மளித்த நீதிபதிகள் ‘நாங்கள் பிறப்பித்த உத்தரவே இறுதி தீர்ப்பு” என்று தெரிவித்து இருந்தனர். இதனால் வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதகாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் பொது விஷயங்களில் அக்கறைக் கொண்ட மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோவியட் மனுவை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த மனுவில் வேதாந்த நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் எங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.