ஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,April 10 2021]
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்து உள்ளார். மறைந்த அரசியல் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக அறியப்பட்டார். இவரது மறைவிற்கு பிறகு அக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எனும் தனிக் கட்சியை ஆந்திராவில் ஏற்படுத்தினார்.
பின்னர் 2014 இல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்ற இவர் தொடர்ந்து தனது கடினமான உழைப்பாலும் மக்களிடம் பெற்ற நல்ல பெயராலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆட்சி அமைத்தார். தற்போது அவரது தங்கை தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் ஆட்சியை கொண்டு வரப்போவதாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக ஐதராபாத்தில் இருந்து கார் மூலம் பேரணியாகச் சென்ற அவர் சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்ற ரஜினி பட வசனத்தையும் கூட்டத்தினரிடையே பேசியிருந்தார். தெலுங்கானாவில் ஏற்கனவே ராஷ்டிரிய சமீதி, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலமாக உள்ள நிலையில் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகளும் ஆந்திர மாநில முதல்வரின் தங்கையுமான ஷர்மிளா புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது அம்மாநிலத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.