கொரோனா வைரஸ் பரவல் - அமுல் நிறுவனத்தின் விளம்பரமாக மாறியது
- IndiaGlitz, [Thursday,February 06 2020]
உலக நாடுகளுக்கு இடையே அவசர நிலை பிறப்பிக்கப் பட்டு, உலக மக்களையே அச்சுறுத்தும் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகியுள்ளது. முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைக்காக, சீனாவில் இருக்கும் வெளிநாட்டினர் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சீனாவில் இருந்த இந்தியர்களை பத்திரமாக பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மீட்டது. இந்நிலையில் சீனாவில் இருந்து திரும்புவதைப் போன்ற ஒரு விளம்பரத்தை அமுல் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலை தளங்களில் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் பால் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முக்கிய நிறுவனங்களில் அமுல் நிறுவனமும் ஒன்று. கிண்டல் செய்வதற்காகவும், கொஞ்சுவதற்காகவும் கூட ”அமுல் பேபி” என்ற வார்த்தைகள் சாதாரணமாக பயன்படுத்தப் படுவது உண்டு. இந்நிறுவனம் குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
அமுல் நிறுவனம் தற்போது கொரோனா வைரஸை மையப்படுத்தி ஒரு புதிய விளம்பரத்தை உருவாக்கி டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. கையால் வரையப்பட்டது போன்ற ஒரு ஓவியத்தில் சில முகமூடி அணிந்த நபர்கள் விமானத்தில் இருந்து திரும்புவதைப் போன்ற காட்சிகள் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் Amul home coming snack என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பி இந்தியா திரும்புவதைப் போன்ற கருத்தும் இந்த ஒவியத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கேரளாவில் 3 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதோடு அம்மாநிலத்தில் மாநில பேரிடர் அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
#Amul Topical: Coronavirus outbreak - Indians evacuated from China! pic.twitter.com/KM6RH35AAS
— Amul.coop (@Amul_Coop) February 4, 2020