கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை!
- IndiaGlitz, [Friday,January 22 2021]
ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிற்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனால் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு தற்போது கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கான தீவிர சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட இருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவருக்கு முதற்கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள அரசு பவுரிங் மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக நேற்று காலை தகவல் வெளியானது. அதையடுத்து நேற்ற மாலை சிடி ஸ்கேன் எடுப்பதற்காக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது தனது தொண்டர்களைப் பார்த்து அவர் கையசைத்த வீடியோ மற்றும் புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மூச்சுத் திணறல் அதிகமான நிலையில் அவர் தீவிரச் சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் அவருக்கு நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் கொரோனாவிற்கான தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.