பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் நடிகை குஷ்பு… பிரச்சாரத்தில் தமிழக முதல்வர்!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்புவை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நடிகை குஷ்பு நன்கு பேசக்கூடியவர், திறமைசாலி எனவும் புகழ்ந்து கூறினார். அதோடு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டவர் எனவும் முதல்வர் பொதுமக்கள் முன் நம்பிக்கை ஏற்படுத்தினார்.

மேலும் பிரதமர் ஏழை, எளிய மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் அத்தகைய பிரதமர் மோடியின் ஆசிப்பெற்ற வேட்பாளர் தான் குஷ்பு என்றும் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும் என்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை குஷ்பு நிறைவேற்றித் தருவார் எனவும் நம்பிக்கை தரும் வார்த்தைகளில் விளக்கம் அளித்துள்ளார்.