சூடுபிடிக்கும் சோஷியல் மீடியா vs மத்திய அரசு கருத்துப்போர்… நடப்பது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் செயல்படும் சமூக வலைத்தளங்கள், OTT, News service, மற்றும் ஆன்லைன் தளங்களுக்கு புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை (Guide line) வகுத்து மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட காலஅவகாசம் மே 25 ஆம் தேதியோடு முடிந்த நிலையில் ஃபேஸ்புக், கூகுள் மட்டுமே இந்த விதிமுறைகளை ஏற்று சேவையைத் தொடருவதாக அறிவித்து இருக்கின்றன.
ஆனால் மற்ற ஊடகங்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் முடக்கப்படுமா என்பது போன்ற பதற்றத்தையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய விதிமுறைகள் தனிப்பட்ட உரிமைக்கு எதிராக இருக்கிறது எனக் கூறி வாட்ஸ்அப் நிறுவனம், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது. இதனால் இந்தியாவில் செயல்படும் சோஷியல் மீடியா நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு கருத்துப்போரே உண்டாகும் அளவிற்கு இந்தப் பிரச்சனை விஷ்வரூபம் எடுத்து இருக்கிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தொடுத்துள்ள புதிய வழக்கு குறித்து, புதிய விதிகள் வாட்ஸ்அப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என்றும் பயனாளர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க அரசு உறுதிப் பூண்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. மேலும் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கும் தேசிய பாதுகாப்பை பேணுவதற்கும் இந்தத் தகவல்கள் அடங்கிய விதிகள் அவசியம் என்றும் விளக்கம் அளித்து இருக்கிறது. ஆனால் இந்த விளக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனம் ஒப்புக் கொள்ளுமா? அல்லது பயனாளிகளின் உரிமைக்காகக் குரல் கொடுக்குமா? என்ற சந்தேகம் தற்போது வலுத்து இருக்கிறது.
காரணம் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பயனாளிகளின் ரகசியத்தை 100% பாதுகாப்போம் என்ற அடிப்படையில்தான் செயல்பட்டு வருகின்றன. அதோடு இந்தச் செயலி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் இந்நிறுவனம் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை. அதோடு பயனாளிகள் என்ன அனுப்புகிறார்கள் என்பதுகூட அந்நிறுவனத்திற்கு தெரியாத வகையில்தான் செயலியும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவேளை மத்திய அரசு கூறும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்தியாவிற்காக வாட்ஸ்அப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும். அதோடு ரகசியத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அந்த வார்த்தையையும் திரும்பப் பெற வேண்டி இருக்கும். மேலும் இதனால் மத்திய அரசுக்கு மட்டும் சாதகமாகச் செயல்பட்டு பயனாளிகளை கைவிட வேண்டுமா? என்ற கேள்வியையும் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் எழுப்பத் தொடங்கி இருக்கிறது.
யாருக்கு எல்லாம் இந்த விதி?
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி 50 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டு இருக்கும் சோஷியல் மீடியா (Messaging service), OTT தளங்கள், Online News service, streaming service, மற்றும் கூகுள் போன்ற ஆன்லைன் தளங்களுக்கும் இந்த விதிப் பொருந்தும்.
இந்தியாவில் வாட்ஸ் செயலியை 53 கோடி பேரும், யூடியூப்பை 44 கோடி பேரும், ஃபேஸ்புக்கை 41 கோடி பேரும், டிவிட்டரை 2 கோடி பேரும், இன்ஸ்டாகிராமை 21 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர ஆடியோ, வீடியோ சேர் செய்து கொள்ளும் அனைத்து ஆன்லைன் தளம் மற்றும் Online News channels களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த விதி?
மத்திய அரசின் கூற்றுப்படி சோஷியல் மீடியாக்களில் அவதூறு செய்திகள் அடிக்கடி பரவுகின்றன. இதனால் உயிரிழப்பு, வன்முறை, போராட்டகள் நடைபெற்று மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுபோன்ற அவதூறுகளை அடையாளம் கண்டுபிடித்து 36 மணி நேரத்தில் அவற்றை நீக்கவும் அதோடு இதுபோன்ற அவதூறு செய்திகளை யார் முதலில் உருவாக்கினார்கள் (origin) என்பதைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த விதிகள் பயன்படும் என விளக்கம் அளித்து இருக்கிறது.
இந்தக் கூற்றில் உண்மை இருந்தாலும் சோஷியல் மீடியா போன்ற Messenger களை தொடர்ந்து கண்காணிக்கும்போது தனிப்பட்ட உரிமை பறிபோகாதா? என அந்நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன. மேலும் சோஷியல் மீடியாவில் அனுப்பப்படும் அனைத்துத் தகவல்களையும் தொடர்ந்து சேமித்து வைத்துக் கொள்வது சாத்தியமா என்ற பெருத்த சந்தேகத்தையும் எழுப்பி உள்ளன.
இதுமட்டும் அல்லாது மத்திய அரசின் புதிய விதிப்படி இந்தியாவில் ஒவ்வொரு நிறுவனமும் Compliance Officer, Nodal Officer, Grievance Officer எனத் தனித்தனியாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதன் மூலம் மத்திய அரசு கேட்கும் சட்ட அமலாக்கத்துறை தொடர்பான அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் கொடுக்க வேண்டும். மேலும் அவதூறு தகவல்களை யார் முதலில் உருவாக்கினார்கள் என்ற விவரம் தேவைப்படும் போது அவற்றையும் உடனடியாக இந்த அலுவலகங்கள் மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு எதை நீக்கச் சொல்கிறதோ அந்த செய்திகளை 36 மணி நேரத்தில் நீக்க வேண்டும்.
இப்படி செய்யாத நிறுவனங்கள் மீது செக்சன் 79 இன் கீழ் 1 இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது இந்தியாவில் விதிகளை மீறி செயல்படும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என இந்த விதி குறிப்பிடுகிறது.
இதனால் வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் என்ன செய்யப் போகிறது. ஒருவேளை மத்திய அரசு கொடுக்கும் விதிமுறைகளை ஏற்கும்போது பயனாளிகளுக்கு தேவையற்ற தொந்தரவு ஏற்படுமா? மேலும் கருத்துச் சுதந்திரம் பறிபோகுமா? எனப் பல்வேறு சந்தேகங்கள் முளைத்து இருக்கின்றன. இதற்கான விடை கூடிய விரைவில் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout