இந்திய நாடாளுமன்றத்தின் புதிய மாதிரி வடிவம் வெளியீடு; 2024 க்குள் கட்டி முடிக்கத் திட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய நாடாளுமன்றம் வட்ட வடிவிலான கட்டிட அமைப்புடன் மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இந்திய நாடாளுமன்றமானது பிரிட்டிஷ் கட்டிடக் கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு 1921 இல் இருந்து 1927 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது ஆகும். மேலும் இது 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த காலச்சூரி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சவ்சாத் கோவில் கட்டிடத்தின் முன்மாதிரியே என்பதும் குறிப்பிடத் தக்கது.
நாடாளுமன்றத்தின் இட நெருக்கடி குறித்து அவ்வபோது கேள்விகள் எழுப்பப் பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசு புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மாதிரியை வெளியிட்டுள்ளது. முதலில் 2020 ஆம் ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபம் கட்டி முடிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபம், மக்களவை உறுப்பினர் 900 எம்.பி.க்கள் அமர போதுமானதாகவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்ந்து அமருவதற்கு ஏதுவாக 1350 இருக்கைகளைக் கொண்டதாகவும் கட்டி முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட உள்ள கட்டிடத்தில் எம்.பி. க்களின் இருக்கைகள் இருவர் உட்காரும் வண்ணம் பெரிதாக உருவாக்கப்பட உள்ளன. இதனால் நெருக்கடியான சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என விளக்கம் கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி. (HCP Design) நிறுவனம் நாடாளுமன்ற வளாகத்திற்கான முன் மாதிரியைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. மத்திய அரசு இந்த நிறுவனத்தின் மாதிரி வடிவமைப்பை ஏற்றுக்கொண்டு இந்திய நாடாளுமன்றத்தை முக்கோண வடிவத்தில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட உள்ள நாடாளுமன்றத்தின் முழு வளாகம், வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட உள்ள நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தின் பின்புறம் பிரதமர் இல்லமும், வடக்கு புறமாக குடியரசு துணைத் தலைவர் இல்லமும் அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் புதிய வளாகத்தின் பணிகளுக்காக நாடாளுமன்ற வாளகத்தில் உள்ள இந்திராகாந்தி தேசிய கலை மையம் மற்றும் சில கட்டிடங்கள் இட மாற்றம் செய்யப்பட உள்ளன. தேசிய காப்பகக் கட்டிடங்களும் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
புதிய இருக்கைகள்
நாடாளுமன்ற கூட்டு அவை நேரங்களில் தற்போதுள்ள இருக்கைகள் மிகவும் நெருக்கடியை உண்டுபண்ணுகிறது. இரு இருக்கைகள் சேர்ந்தவாறு உருவாக்கப்பட உள்ள புதிய இருக்கைகள் கூட்டுத் தொடர் நேரங்களில் எம்.பி.க்கள் பின்னால் எழுந்து செல்வதற்கு வசதியான இடங்களைக் கொண்டிருக்கும். எம்.பிக்களின் எண்ணிக்கையானது விகிதாசார அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதற்கேதுவாக மத்திய மண்டபத்தில் 900 இருக்கைகள் உருவாக்கப்பட இருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்படாது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அவை நேரங்களில் ஏற்படும் எதிரொலியைத் தவிர்ப்பதற்காகப் புதிய தொழில் நுட்பங்கள் கையாளப்படும் எனத் (HCP Design) நிறுவனம் தனது திட்டத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் வடிவமைப்புக்காக இந்நிறுவனம் கியூபா, எகிப்து, சிங்கப்பூர், மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments