பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பி டீக்கடைக்காரர் வைத்த வேண்டுகோள்… இணையத்தில் வைரல்!
- IndiaGlitz, [Thursday,June 10 2021]
மகாராஷ்டிராவை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100ஐ மணி ஆர்டரில் அனுப்பி வைத்ததோடு ஒரு கடிதத்தையும் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய கடிதம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பிரதமர் நரேந்திர மோடி பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வருகிறார். அதோடு நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அவ்வபோது மன்கிபாத் நிகழ்ச்சி மூலமும் ஊடகங்கள் வழியாகவும் பேசி வருகிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வழங்கிய ஒரு நேர்காணலின்போது கொரோனா நேரத்தை பயன்படுத்தி புத்தகங்களை வாசித்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த அனைத்தையும் விட கொரோனா நேரத்தில் பிரதமரின் தோற்றமே மாற்றம் அடைந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவரது தாடி வெள்ளை நிறத்தில் நீளமாக வளர்ந்து இருக்கிறது. இந்தத் தாடியை சேவ் செய்யுமாறு மகாராஷ்டிராவை சேர்ந்த டீ கடைக்காரர் அனில் மோர் ரூ.100 பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதனால் அவரை அவமதிக்கும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை என்றும் அவர் இந்த நாட்டின் தலைவர், கொரோனா நேரத்தில் மக்கள் அனைவரும் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த விஷயத்தை பிரதமர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இப்படி செய்தேன் என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
மேலும் அனில் மோர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பிரதமர் மோடி தாடியை வளர்த்துக் கொண்டார். அவர் ஏதாவது அதிகரிக்க வேண்டும் என்றால் அது இந்த நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் செய்ய வேண்டும். இறுதியாக இரண்டு ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் துயரங்களில் இருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனில் மோர் தற்போது ஊடகங்களில் கவனிக்கப்படும் ஒரு மனிதராக மாறிவிட்டார். அதோடு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அது வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும் என அனில் கூறிய வார்த்தைகளும் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.