மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ?

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

2020ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து தமிழ்நாடு, இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் சோதனையான ஒரு ஆண்டாகவே இருந்தது. ஜனவரி மாதமே உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவிய நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவி பரவி விட்டது

இதனை அடுத்து மார்ச் மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பெரும் சிக்கலில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஓரளவு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு தற்போது தான் இயல்பு நிலைக்கு பொதுமக்கள் திரும்பி உள்ளனர்

ஆனால் திடீரென தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி என அடுத்தடுத்து இரண்டு புயல் தோன்றியதன் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் பொதுமக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது புரெவி புயல் காரணமாகவும் பெரும் சேதம் ஏற்படும் என்று கருதப்படுகிறது

இந்த நிலையில் மீண்டும் ஒரு சோதனையாக மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுக்குமா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும்

மொத்தத்தில் இந்த 2020 ஆம் ஆண்டு பெரும் சோதனையான ஆண்டாக இருக்கிறது என்றும், இந்த ஆண்டு எப்போது முடியுமோ என்பதும் பொது மக்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும் இந்த புயல்கள் காரணமாக நல்ல மழை பெய்துள்ளதால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது என்பதும் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது என்பது ஒரு நல்ல விஷயமாகும்