பெரியாருக்கு 5 டன் மணலில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சிற்பம்… அசத்தும் இளைஞர்!!!
- IndiaGlitz, [Thursday,September 17 2020]
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இன்று 142 ஆவது பிறந்தநாள். அதை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி அடுத்த வீராம்பட்டு கடற்கரையில் இளைஞர் ஒருவர் 5 டன் மணலைக் கொண்டு பெரியாருக்கு பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்து இருக்க்கிறார்.
புதுச்சேரியில் உள்ள பாரதியார் சிற்பக்கல்லூரியில் பயிற்சி பெற்று, பின்னர் பெங்களூர் சித்ரகலா சிற்பச்சாலையில் முதுகலைப் பட்டம் முடித்த இளைஞர் குபேந்திரன் தற்போது பெரியாருக்கு பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்து இருக்கிறார். இவர் ஒரு ஓவியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய தலைவர்கள் மற்றும் இயற்கைச் சூழல் சார்ந்த சிற்பப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் இவர் வென்றிருக்கிறார்.
தற்போது பெரியாருக்குச் சிறப்பு செய்யும் வகையில் இவர் உருவாக்கிய சிற்பம் 5 டன் மணலால் செய்யப்பட்டது என்றும் இதை செய்வதற்கு 48 மணி நேரம் ஆனதாகவும் தகவல் கூறப்படுகிறது. மேலும் இன்று காலை முதலே பெரியாரின் பிரம்மாண்ட மணல் சிற்பம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பெரியார் மணல் சிற்பத்திற்கு கீழ் குபேந்திரன் “Ban Neet” “இந்தி தெரியாது போடா” போன்ற வாசகத்தையும் எழுதி வைத்திருந்தார். தற்போது பெரியாருக்கு பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடித்த குபேந்திரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.