ரஷ்யா தீவுகளில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! சிறிய சுனாமி அலைகள்!!!
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
இன்று காலை ரஷ்யாவின் குரில் தீவுகளில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதையடுத்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. பாதிப்புகள் இல்லாததால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்ப பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஜப்பான் நகரமான சப்போரோவிலிருந்து வடகிழக்கில் 1,400 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஆரம்பத்தில் நிலநடுக்கம் 1000 கி.மீ தூரத்திற்கு அபாயத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து இருந்தது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மிகச் சிறிய சுனாமி அலைகள் மட்டுமே உருவானது. மேலும் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஹவாய், ஜப்பான், ரஷ்யா மற்றும் பசிபிக் தீவுகள், வடக்கு மரியானாஸ் மற்றும் வேக் தீவு போன்ற கடற்கரை பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஜப்பானில் வானிலை ஆய்வு அதிகாரிகள் எந்த எச்சரிக்கையையும் அறிவிக்கவில்லை. அவர்கள் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தனர். ஹவாய் பகுதிகளில் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
ரஷ்யத் தீவுகளை ஒட்டியப் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட இருப்பதைக் கணித்த ஆராய்ச்சியாளர்கள் சுனாமியாக இருக்கலாம் என சந்தேகித்தனர். அதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் சிறிய சுனாமி அலைகள் மட்டுமே ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெற்றப்பட்டது.