முதல்வர் விழாவில் புளிசாதம் சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விராலிமலை அருகே தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்று அங்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் திருநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்காக திருநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலர் பட்டி, நாயக்கன்பட்டி, மேலகளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பெண்களும் குழந்தைகளும் வேன் மூலம் அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அவர்களுக்கு எலுமிச்சை சாதம், புளி சாதம் முட்டையுடன் கூடிய ஒரு தண்ணீர் பாட்டிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பெற்றுக் கொண்டு அன்று மாலை வீட்டிற்கு திரும்பிய பொதுமக்கள் பொட்டலங்களில் இருந்த உணவை சாப்பிட்டு விட்டு உறங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் வள்ளிக்கண்ணு (40), புவனேஸ்வரி (40), சத்யா (25) உள்ளிட்ட 34 பெண்கள், 4 ஆண்கள், ஒரு சிறுமி, ஒரு சிறுவன் ஆகியோருக்கு வாந்தி மயக்கம் போன்றவை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சில தினங்களில் இவர்கள் வீடு திரும்புவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments