21 வயதில் ஒரு மேயர்… இந்திய அளவில் சாதனை படைத்த கல்லூரி மாணவி!!!
- IndiaGlitz, [Saturday,December 26 2020]
அண்டை மாநிலமான கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்று 21 வயதில் மேயர் பதவிக்கும் தேர்வாகி இருக்கிறார் ஒரு கல்லூரி மாணவி. இதன் மூலம் இந்தியாவிலேயே இளம் வயது மேயர் என்ற பெருமையையும் தட்டிச் சென்று இருக்கிறார். திருவனந்தப்புரத்தில் உள்ள எல்பிஎஸ் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து வரும் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் என்பவர்தான் தற்போது திருவனந்தபுரம் தொகுதியின் மேயர்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதில் திருவனந்தபுரத்தின் முடவன்முகல் வார்டு வேட்பாளராக மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்யா போட்டி இட்டார். இத்தேர்தலில் அபாரமான வெற்றியும் வெற்றார். அதையடுத்து நடைபெற்ற மேயர் பதவிக்கான போட்டியிலும் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இவர் திருவனந்தபுரம் தொகுதியின் மேயராக அறிவிக்கப்படடு இருக்கிறார்.
கல்லூரி மாணவியாக இருக்கும்போதே ஆர்யா இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநிலக் குழுவில் இடம்பெற்றுள்ளார். மேலும் திருவனந்தபுரம் குழந்தைகள் நல பிரிவான பால சங்கத்தின் கேரள மாநிலத் தலைவராகவும் உள்ளார். இவர் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதளால் இளம் வயதிலேயே சமூகத்தின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறைக்கு அடையாளமாகத் தற்போது மேயர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். மாணவர் சமுதாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற வாசகத்தை அடிக்கடி கேட்டு இருப்போம். இந்நிலையில் 21 வயதிலேயே மேயராகி இருக்கும் ஆர்யா பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.