2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் – அரசியல் வியூகம், அரியணை யாருக்கு???
Send us your feedback to audioarticles@vaarta.com
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூத்த தலைமைகளை களம் கண்ட தமிழகத்தின் முதலமைச்சர் அரியாசனத்தை அடுத்து யார் பிடிக்கப் போகிறார்? யார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்? தமிழகத்தின் அரசியல் நகர்வுகள் குறித்த ஒரு விவாதம் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுப்பப் பட்டு வருகிறது.
முதுபெரும் கட்சித் தலைவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் தமிழக சட்ட மன்றத் தேர்தல் 2021 இல் நடக்கவிருக்கிறது. இதில் யார் அரியணை ஏறப் போகிறார்கள்? யார் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போகிறார்கள்? இந்தக் கேள்வி மக்கள் மத்தியில் மட்டுமில்லாமல் சொந்த கட்சியினரின் நாடி துடிப்பில் கூட இருக்கிறது என்பது தான் உண்மை நிலவரம்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தாண்டி மூன்றாவது அணி அமைக்கப் படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? தமிழ் தேசியம் பேசக் கூடியவர்களின் நிலைமை என்ன? திமுகவின் கூட்டணியில் இருக்கும் பொதுவுடைமை கட்சிகள் என்ன செய்ய போகின்றன? ஒரு காலத்தில் எதிர்க் கட்சியாக இருந்த தேமுதிக இந்த தேர்தலில் நிலைக்குமா? திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகளை ஒதுக்கும்? சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் நிலையில் அவர்களது அடுத்த செயல் என்னவாக இருக்கும்? நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கமல் சட்டமன்றத் தேர்தலில் என்ன முன்னேற்றங்களை காணப் போகிறார்? கட்சியின் பெயரை அறிவிக்காத நடிகர் ரஜினி சட்ட மன்றத் தேர்தலில் நிற்கப் போகிறாரா? இன்னும் இருக்கிற உதிரி கட்சிகள் யார் பக்கம் நிற்க போகிறது? இப்படி பல கேள்விகள்…
அதிமுக – மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையில் கட்டுக்கோப்பாக இருந்த கட்சி ஒருமைப்பாட்டை இழந்து பல குழப்பங்கள் நிலவின. ஒருபக்கம் தினகரன் தலைமை உருவாகியது. கட்சியினர் தங்களுக்குள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டி பல போராட்டங்கள். பன்னீர்செல்வம், எடப்பாடி என இரு பெரும் போட்டிகள் நிலவின. கடைசியில் ஒப்பந்தங்கள் சரிக்கட்டப் பட்டு எடப்பாடி தலைமை உருவாகியது. எத்தனை நாட்களுக்கு இவர் நிலைத்திருப்பார் என்ற கேள்விக்கு மத்தியில் சிறப்பான ஆட்சியை தொடர்ந்து கொண்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்து வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்தது அதிமுக. தேனித் தொகுதியில் மட்டும் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றிப் பெற்றார். இடைத்தேர்தலில் நாங்கு நேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிப் பெற்றனர். இடைத் தேர்தலிலும் பெரும்பான்மையான இடத்தை திமுகவே வென்றது குறிப்பிடத் தக்கது. உள்ளாட்சித் தேர்தலிலும் இதே நிலைமைதான். இந்த நிலைமையில் ராஜ்ய சபா தேர்தலில் கூட்டணி கட்சியான தேமுதிக ஒரு சீட்டினை எதிர்ப்பார்க்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்காது என்றே கணிக்கப் பட்டு வருகிறது.
ராஜ்யசபாவில் 55 வேட்பாளர்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே 17 மாநிலங்களில் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்ப உள்ளனர். வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக தனது சட்ட மன்ற எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது 3 வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. அதே போல திமுகவும் 3 வேட்பாளர்களை நிறுத்த உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப் போவதில்லை என்கிற ரீதியில் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தரப்பில் சந்திரசேகரனுக்கும் கூட்டணி கட்சியான பா.ம.க. வின் அன்புமணிக்கும் சீட் ஒதுக்கப் பட்டது. முஸ்லீம் ஒருவருக்கு சீட் ஒதுக்கப் பட வேண்டும் என்கிற கட்சியின் நிலைப்பாட்டை அடுத்து முகமது ஜானுக்கு சீட் கொடுக்கப் பட்டு இருந்தது. அதே போல இந்த முறை பின்னப் படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
ராஜ்யசபா சீட்டில் ஒன்றினை பன்னீர் தரப்புக்கும் மற்றொன்றை எடப்பாடி தரப்புக்கும் மற்றுமுள்ள இன்னொன்றை கிறிஸ்துவர் ஒருவருக்கும் ஒதுக்கப் படலாம் என செய்திகள் அடிபடுக்கின்றன. ஆனால் கூட்டணி கட்சியான தேமுதிக ஒரு சீட்டினை கேட்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ராஜ்யசபா தேர்தல் மற்றும் 2021 சட்ட மன்றத் தேர்தலில் திமுக புதுயுக்திகளை கையாள இருப்பதாகத் தற்போது பேச்சுகள் அடிபடுகிறது. இந்திய அரசியலில் சாணாக்கியனாகக் கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ள திமுக அவரது ஆலோசனைகளை பின்பற்ற போவதாகவும், அதன்படி சில முக்கிய மாற்றங்களை எடுக்கப் போவதாகவும் செய்திகள் தெரிய வருகின்றன.
திமுக தமிழகத்தின் 234 சட்ட மன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலே வெற்றிப் பெற்று விடும் என அரசியல் சாணாக்கியர் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டு இருக்கிறார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் கிடைக்கப் பெற்றது. ஆனால் திமுக தனித்துப் போட்டியிடுவதை அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் யாரும் விரும்பவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்திய அளவில் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில் கட்சி வலிமை பொருந்தியிருப்பதாகவே திமுக தரப்பில் நம்பப் படுகிறது. உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்புகளாலும் நம்பிக்கை குடி கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் கூறும் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை திமுக கையில் எடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கும் கேள்வியாகவே இருக்கிறது.
அமமுக அடுத்த நகர்வினையும் 2021 சட்ட மன்றத் தேர்தலில்தான் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். சசிகலாவின் அரசியல் பிரவேசம் என்ன வகையான தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டி இருக்கிறது. அமமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களும் கட்சித் தாவலில் ஈடுபட்டது அக்கட்சியின் குலைவுக்கு காரணமாக அமைந்து விட்டது. ஆர்.கே. நகர் தொகுதியில் தனது வலுவினை வெளிப்படுத்திய தினகரன் அடுத்த சட்ட மன்றத் தேர்தலில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள என்ன செய்வார் என்பது போன்ற எதிர்ப்பார்ப்பில் அரசியல் நகர்வுகள் இருந்து வருகின்றன.
தேமுதிக ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் தற்போது ராஜ்ய சபா சீட்டை எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தேமுதிக முக்கிய தலைவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து விட்டதால் கட்சிக் கூடாரம் காலியாகி இருக்கிறது. இந்தச் சூழலில் தேமுதிக சட்டமன்றத் தேர்தலில் முக்கியமான கட்சியாக மதிக்கப் படுமா என்ற சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
பா.ம.க. ஆளும் கூட்டணியுடன் ஒன்றிணைந்த கட்சியாக இருந்துகொண்டே பல நேரங்களில் தனக்கான தனி அடையாளத்தைக் காட்ட வேண்டிய தேவையில் எப்போதும் சிக்கலை சந்தித்து வருகிறது, என்றாலும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கியை இன்றைக்கும் கொண்டிருக்கின்ற கட்சியாக பா.ம.க விளங்குகிறது. தமிழகத்தின் பலமுனை போட்டிகளில் பா.ம.க. பலம் வாய்ந்த நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் என்றே பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய அடையாளத்துடன் தன் கொள்கையில் எப்போதும் உறுதியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 வருடங்களாக மக்களின் அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 3.8% ஓட்டினைப் பெற்று தனித்த அடையாளமாக மாறியிருக்கும் நிலையில் சட்ட மன்றத் தேர்தலில் இக்கட்சி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடன் அரசியலில் நுழைந்த நடிகர் கமல் தனது பகுத்தறிவு கருத்துக்களால் ஒரு தெளிவான பாதையை முதலில் வகுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம். இதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் ஆலோசனைகளும் இருந்தன என்ற விமர்சனங்களும் எழுந்தன. நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளைப் பெற்று தனது வலிமை நிலை நிறுத்திக் கொண்டு, இடைத் தேர்தலில் பங்கு பெறவில்லை. தொடர்ந்து சினிமா துறையிலும் தனது கவனத்தைச் செலுத்தி விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 3.7% வாக்குகளை சினிமா ஒளியிலே பெற்று விட்டார், மக்கள் மத்தியில் எந்த வேலைகளையும் செய்யவில்லை என்ற குற்றச் சாட்டும் தொடர்ந்து இவர் மீது வைக்கப் படுகிறது. 2021 இல் சட்ட மன்றத்தேர்தலில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள என்ன செய்யப் போகிறார்? அனைத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகளை அறிவித்து பலப்படுத்திய நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவே அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பா.ஜ.க. 49-O க்கும் குறைவான வாக்கினையே பெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று நம்பிக்கை தெரிவித்த தலைவர் தற்போது மற்றொரு மாநிலத்தின் ஆளுநராக மாறியிருக்கிறார். சில பா.ஜ.க உறுப்பினர்கள் தமிழகத்தில் தனித்து போட்டியிடும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் திராவிடக் கருத்தியல் உள்ள ஒரு மாநிலத்தில் காவிக்கான கருத்தியல் ஒருபோதும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடியாது என மற்றக் கட்சிகள் கருத்துக் கூறிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் வகுப்புவாதக் கொள்கைகள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலையை கிளப்பி வரும் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பாஜகவின் நிலைமை என்ன என்பது எதிர்காலத்தில் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
பொதுவுடைமைக் கட்சிகள் தங்களது சித்தாந்தங்களை விட்டு விட்டு, அதிமுக கூட்டணி தற்போது திமுக கூட்டணி என்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெரிய வலுவான சக்தியாக தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை நிலவரம். ஆனால் சித்தாந்தங்களுக்காக பொதுவுடைமை கட்சிகளின் நிலைப்பாட்டை தொடர்ந்து அரசியல் கட்சிகளிடமும் பொது மக்களிடமும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
ரஜினி- அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்ற கூறிவிட்டு கட்சிக்கான அறிவிப்பினை கொடுப்பார் என எதிர்ப்பார்த்திருந்த நிலையில் பா.ஜ.க. வுடன் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி என விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. அவ்வபோது கூறும் கருத்துக்களும் இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைகிறது. இப்படியான சூழலில் 2021 இல் தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் நிற்பாரா? கட்சி ஆட்சிக்கு வருமா? அல்லது அரசியல் வெற்றிடத்தை நிரப்புவாரா? போன்ற கேள்விகளுக்கான எதிர்ப் பார்ப்புகள் அவரது ரசிகர்களிடம் சிறிதும் குறையவில்லை என்பதே முக்கியமாகக் கருதப்படுகிறது.
காங்கிரஸ், திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியிலே போட்டி இட்டு வருகிறது. தொடர்ந்து தங்களது உறவினை வலுப்படுத்திக் கொண்டும் வருகின்றனர். மத்தியில் தங்களது நிலைப்பாட்டை வலுப்படுத்திக் கொள்ளவும் மாநிலத்தின் சுயாட்சியை மீட்கவும் திமுக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தொடர்ந்து காங்கிரஸ் தனது ஆதரவினையும் தெரிவித்து வருகிறது என்பதும் முக்கியமானது. காங்கிரஸ் வாக்கு வங்கி திமுகவின் பின்னணியில் தான் தமிழகத்தில் பிரதிபலிக்கிறது என்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்காக ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுமா என்கிற ரீதியிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது விஜய் குறித்தும் எதிர்ப்பார்ப்பும் கிளம்பி இருக்கிறது. தனிக் கட்சி அறிவிக்கா விட்டாலும் இவரது ஆதரவு யார் பக்கம் என்பது குறித்த கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. அரசியல் மட்டத்தில் விஜய் எடுக்கவேண்டிய முதல் கட்டமான இந்த முடிவு அவரது எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடிய முக்கிய விஷயமாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளான திமுக, அதிமுக விற்கு தற்போதுள்ள அடுத்த பிரச்சனை ரஜினி, கமல், விஜய், பாமக போன்றோரின் நிலைப்பாடுதான். காரணம் முன்னதாக இந்த நால்வரும் இணைந்து போட்டியிடப் போகிறார்கள் என்ற ரீதியில் செய்திகளும் வெளியாகி இருந்தன. ஆனால் இது எந்தவகையில் சாத்தியம் என்பது தெரியவில்லை. ரஜினி, கமல் என்ற பிம்பங்களைக் காட்டி இருபெரும் கட்சிகளிடமும் கூட்டணி கட்சிகள் சீட்டினை உயர்த்திக் கேட்க வாய்ப்பு இருப்பதாக கணிக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மு.க.ஸ்டாலின் க்கும் இந்தத் தேர்தல் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது.
2021 இல் சட்ட மன்றத் தேர்தல் தான் அதிமுகவின் நிலைப்பாட்டை உறுதியுடையதாக மாற்றுவதற்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடாமலேயே ஆட்சியை பிடித்து விட்டார் எடப்பாடி என்ற விமர்சனத்தை இந்தத் தேர்தலில் சரிக்கட்டுவாரா? என்ற கேள்வியும் முக்கியமானது தான்.
பாரம்பரிய திமுகவின் அடுத்த மிகப் பெரிய தலைவராக மு.க.ஸ்டாலின் தன்னை நிலைப்படுத்திக் கொள்வாரா? தமிழகத்தில் உள்ள உதிரிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பதெல்லாம் மிகவும் சுவாரசியத்தைக் கொண்டவை. தமிழகத்தின் அரசியல் வியூகங்கள் சுவாரசியத்துடன் விவாதங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரம் இது. இந்த அரசியல் பங்கெடுப்பில் தற்போது பாமரன் முதற்கொண்டு அனைத்து தரப்பினர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பதே முக்கியமானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout