கொரோனா சிகிச்சைக்கு 2,000 மினி மருத்துவமனைகள்- தமிழக முதல்வரின் அடுத்த அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகத் தமிழக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனாவின் அவசர சிகிச்சைக்கு 2,000 ஆயிரம் மினி மருத்துவமனைகள் உருவாக்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுததுதல், தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சுகாதாரத் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 மாதங்களில் தமிழக உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 85 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொண்டதால் வைரஸ் பரவல் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையால் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, ஆயிரக் கணக்கானோர் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்ததால் நோய்ப்பரவல் படிப்பாடியாக குறையத் தொடங்கியுள்ளது.
தற்போது ஒருசில துறைகள் தவிர்த்து எல்லாவற்றுக்கும் தளர்வுகள் அளிக்கப் பட்டுள்ளன. முன்பு இ-பாஸ் நடைமுறை இருந்ததால் மக்கள் எங்கு செல்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது. இப்போது தங்கு தடையின்றி அனைத்து இடங்களுக்கும் சென்றுவரக்கூடிய சூழல் இருப்பதால் நோய் பரவலை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி நோய்ப்பரவலை குறைக்க வேண்டும்.
தற்போது கொரோனா குறித்த சந்தேகம் இருப்பதால் பொதுமக்களுக்கு வழக்கமாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார்.
இதில் மாநகராட்சி, நகராட்சி, பெரிய கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்கள் அடங்கும். அங்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இடம்பெறுவர். காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு அங்கு மருந்துகள் வழங்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை காசிமேடு மக்களுக்கு மீன்வளம், காவல், உள்ளாட்சித் துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மெரினா கடற்கரையில் மக்கள் கூடாமல் இருப்பதை காவல்துறை உறுதிசெய்ய வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க காவல், சுகாதாரம், உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு, தனியார் மருத்துவ மனைகளுக்கு வருபவர்களை உடனடியாகச் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனாவுடன் டெங்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் என்பது கொரோனா அறிகுறியாக உள்ள நிலையில் டெங்குவும் வந்தால் பெரும் பிரச்சனையாகிவிடும். எனவே உள்ளாட்சித்துறை கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் 100% திறக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனரா, அனைவரும் முகக்கவசம் அணிகின்றனரா சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா என்று சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்யவேண்டும் என்றும் முதல்வர் அக்கூட்டத்தில் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments