உயர்தர மருத்துவக் கருவிகளைக் கொண்டு கொரோனாவிற்கு தீவிர சிகிச்சை வழங்கும் தமிழக அரசு!!!

 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய அளவில் கொரோனாவிற்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கும் மருத்துவ மனைகளின் பட்டியலிலும் தமிழகத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனையே முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் அதிகப் பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதிலும் தமிழகமே சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது.

அந்த வைகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவினால் 80-90% பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்களுக்கு உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் கடந்த ஜுன் 23 ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு 90% நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்த நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிந்து வந்தனர். இவர் தற்போது 90 நாட்களுக்குப் பின் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். அதேபோல ஐயப்பன் என்பவரும் 80% நுரையீரல் பாதிப்புடன் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியதாகச் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு அதிகமாக இருந்தபோதிலும் தமிழக அரசு முறையான சிகிச்சை வழங்கியதாகப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அதைத்தவிர குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையிலும் தமிழகமே முதலிடம் பெற்றிருக்கிறது எனக் கூறப்படும் நிலையில் அதிகப் பாதிப்பு இருந்தாலும் தமிழக மருத்துவர்கள் போராடி உயிரைக் காப்பாற்றி விடுவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.