அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் மீண்டும் பாதிப்பு… பதைக்க வைக்கும் தகவல்!!!
- IndiaGlitz, [Friday,December 18 2020]
அமெரிக்காவின் பைஃசர் மற்றும் பயோன் டெக் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த கடந்த 7 ஆம் தேதி பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து அவசரத் தேவைக்காக மட்டும் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பைஃசர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட 2 பேருக்கு பிரிட்டன் நாட்டில் ஒவ்வாமை ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியானது.
இதனால் ஏற்கனவே ஒவ்வாமை போன்ற பாதிப்பு உள்ளவர்கள் இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று பிரிட்டன் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டது. மேலும் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்தும் முறையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் பைஃசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை தற்போது தொடங்கி விட்டது. அங்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பார்ட்லெட் மண்டல மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் இருவருக்குத்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நியூயார்க் செய்தித்தாள் குறிப்பிட்டு இருக்கிறது.
பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரண்டு இடங்களிலும் கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே இதுவரை பைஃசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பைஃசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அடுத்தடுத்து ஒவ்வாமை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதில் பெண் சுகாதார பணியாளர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நிமிடத்தில் முகம் மற்றும் உடலில் எரிச்சல் ஏற்பட்டு இதயத்துடிப்பு அதிகரித்தாகவும் அவர் மூச்சுவிடச் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொருவருக்கு கண்களில் வீக்கம், தலைச்சுற்றல், தொண்டை கரகரப்பு போன்ற ஒவ்வாமைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.