தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!!! நேற்று தேர்வு எழுதத் தவறிய மாணவர்களுக்கு மறுத்தேர்வு!!!
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
தமிழகத்தில் நேற்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்பட்ட நிலையில் பெரும்பாலான மாணவர்கள் கொரோனாவுக்கு பயந்து தேர்வுகளை எழுதச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று தேர்வுக்கூடங்களுக்கு சென்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் அவர்களின் விடுப்பு நீடிக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. எனவே தமிழக அரசு 1 முதல் 9 வகுப்பு பயிலும் தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலே, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.
இதன்படி 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எழுதத்தேவையில்லை. அம்மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் தேர்வுகள் எழுதாமலே தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகிய நிலையில் தமிழகமும் இதுபோன்ற நடவடிக்கைளை மேற்கொள்ளுமா என எதிர்ப்பார்க்கப் பட்டது. தற்போது 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதத் தவறிய மாணவர்களுக்கு மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.