தமிழகத்தில் 144 அமல்!!! என்ன செய்யலாம்??? என்ன செய்யக்கூடாது???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு நாளை மாலை 6 மணிமுதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது. இந்நேரத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய் பாதித்த மாவட்டங்களில் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் இன்று 144 பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் பல மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதன்படி மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்படும். அத்யாவசிய சரக்கு போக்குவரத்துத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் அவர்களது மாநிலத்திற்கே திருப்பி அனுப்பப்படும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் இந்த வாகனத் தடை உத்தரவை செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் 144 சட்டப்பிரிவின்கீழ் காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக மாவட்டங்களுக்கு இடையேயும் அத்யாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்துத் தவிர மற்ற வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கார், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை சாலைகளில் இயக்கக்கூடாது. மருத்துக் காரணங்கள், அவசியமான பணிகளைத் தவிர வேறு காரணங்களுக்காகப் பொதுமக்கள் எவரும் வெளியே வரக்கூடாது என்பதும் குறிப்பிடத் தக்கது.
பால், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்படும். தனியார் நிறுவனங்கள் முதற்கொண்டு அனைத்து பணிநிறுவனங்களும் செயல்படாது. வணிகக்கடைகள், தொழில் நிறுவனங்கள் அத்யாவசியமான பொருட்கள் தயாரிப்பை மேற்கொள்ளலாம். அப்படி மருந்து போன்ற அவசியமில்லாத பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் மட்டுமே இயங்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மேற்கண்ட துறைகள் வழக்கம் போல தீவிரமாகச் செயல்படும்.
தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மார்ச் 31 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப் பட்டு இருக்கிறது. எனவே பணியாளர்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாதவாறு தனியார் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், கட்டுப்பாடுகளை மீறுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் கட்டளைகளை மீறி பொது இடங்களில் சுற்றித்திரிவோர், அல்லது தேவையற்ற காரணங்களுக்காகப் பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் அத்யாவசிய உணவு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவித்த அரசு தற்போது அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.
அவசியமான கட்டிடப் பணிகளை மேற்கொள்ளலாம். அவசியமான பணிகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியே உரிய அனுமதியோடு வரலாம் எனவும் தெரிவித்துள்ளது. அத்யாவசியமான மருந்து போன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விடுதி போன்ற சமைப்பதற்கு வழியில்லாத நிலையில் இருப்பவர்களுக்கு உணவுகளை பார்சல் செய்து கொண்டு வந்து கொடுக்கும் உணவகங்கள் பாதுகாப்பு எச்சரிக்கையோடு செயல்பட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்களின் வசதி குறைவிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தப் பட்டுள்ளது.
தடைக் காலத்தில் மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த பயணங்களுக்குத் தடையில்லை. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு, அறிகுறி இருக்கின்ற மாவட்டங்களில் இத்தகைய பயணங்கள் செய்வது குறித்து அரசு மீண்டும் பரிசீலனை செய்யும் எனத் தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments