சவுகார்பேட்டை திரைவிமர்சனம் - சரிந்த கோட்டை
Send us your feedback to audioarticles@vaarta.com
பேய்ப்பட சீசனில் ஆரம்பித்து பேய்ப்பட சீசன் முடிந்த பிறகு வந்திருக்கும் பேய்ப்படம். ஸ்ரீகாந்த் கடந்த சில வருடங்களாக ஒரே ஒரு வெற்றிப்படத்திற்கு காத்திருந்த நிலையில் இந்த சவுகார்பேட்டை' தன்னை கரையேற்றும் என பெரும் நம்பிக்கையில் இருந்த படம். அதேநிலைதான் ராய்லட்சுமிக்கும். இருவரின் நம்பிக்கையையும், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் இந்த படம் நிறைவேற்றியதா? என்பதை பார்ப்போம்
வட்டிக்கு பணம் கொடுத்து பணத்தை திரும்ப கொடுக்க முடியாதவர்களிடம் இருந்து உயிரையும், கற்பையும், சொத்துக்களையும் திருப்பி வாங்கும் கொடூரமான சேட்டு சுமன். இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிய ஸ்ரீகாந்தின் தந்தை தலைவாசல் விஜய், பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியின் திருமணம் நடக்கவிருந்த ஒருசில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீகாந்தின் அம்மா, அப்பா இருவரையும் கொலை செய்துவிட்டு, வீட்டை கைப்பற்ற சுமன் வருகிறார். அதை தடுக்க முயற்சிக்கும் ஸ்ரீகாந்தையும், ராய்லட்சுமியையும் அடித்து அந்த வீட்டிலேயே உயிரோடு புதைத்து விடுகிறார். திருமணத்திற்கு முன்பே கொலை செய்யப்பட்ட இருவரும் ஆவியாக வந்து சுமன் குடும்பத்தினர்களை பழிவாங்க பேயாக வருகின்றனர். இந்த நேரத்தில் இன்னொரு ஸ்ரீகாந்த் திடீரென வருகிறார். அவர் சுமனுக்கு உதவி செய்தாரா? அவருக்கும் செத்துப்போன ஸ்ரீகாந்துக்கும் என்ன சம்பந்தம்? ஆவிகள் சுமனை பழிவாங்கியதா? இன்னொரு ஸ்ரீகாந்த் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பேய்ப்படம் என்றால் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை என்பது சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்தே வரும் ஃபார்முலா. இந்த ஃபார்முலாவை எப்படி பயன்படுத்துவது என்பதில்தான் திறமை இருக்கின்றது. முனி, காஞ்சனா, டிமாண்டி காலனி போன்ற படங்களை இயக்கி தங்கள் புத்திசாலித்தனத்தை நிரூபித்த இயக்குனர்களுக்கு நடுவில் ஒருசில இயக்குனர்கள் தோல்வி அடைவதும் உண்டு. அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டுத்தான் இந்த சவுகார்பேட்டை இயக்குனர் வடிவுடையான்
ஸ்ரீகாந்த் முதலில் ராய்லட்சுமியுடன் உரசி உரசி காதல் செய்கிறார். பின்னர் பேயாக மாறி சுமன் குடும்பத்தவர்களை பயமுறுத்தி கொல்கிறார். பின்னர் கடைசியில் இன்னொரு ஸ்ரீகாந்துடன் மோதுகிறார். எதாவது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாரா? என்பதை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.
ராய்லட்சுமி பேயாக வந்தாலும் சரி, கடவுளாக வந்தாலும் சரி, அவரை கிளாமராகத்தான் காட்டுவோம் என்பதை முடிவு செய்துவிட்டார் இயக்குனர். பேயாக வந்து பயமுறுத்துகிறாரோ இல்லையோ, கவர்ச்சியால் இளசுகளை கவர்ந்துள்ளார்.
சுமன் கதாபாத்திரம் முதல் பத்து நிமிடங்களுக்கு மட்டும் வில்லன். அதற்கு பின்னர் கடைசி வரை காமெடி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ஏற்கனவே சரவணன், சிங்கமுத்து, பவர்ஸ்டார் என மூன்று காமெடியன்கள் இந்த படத்தில் இருக்கும்போது இயக்குனர் ஏன் நான்காவது காமெடியனாக சுமனை இணைத்தார் என்று புரியவில்லை.
சரவணன், சிங்கமுத்து, பவர்ஸ்டார் ஆகிய மூவரும் கஷ்டப்பட்டு காமெடி செய்துள்ளார்கள். ஆனால் அவர்களுடைய காமெடி காட்சிகளை பார்ப்பவர்களுக்கு அதைவிட கஷ்டம்தான் ஏற்படுகிறது. இதில் ஒருசில வசனங்கள் முகத்தை சுழிக்கவைக்கும் இரட்டை அர்த்த வசனங்கள்
ஜான் பீட்டரின் இசையில் முதல்பாடல் மட்டும் கேட்கும்படியாக இருக்கின்றது. பாடல் படமாக்கப்பட்ட லொகேஷனும் சூப்பர். மற்ற அனைத்து பாடல்களும் பின்னணி இசையும் காதுக்கு இரைச்சல். ஒளிப்பதிவு, எடிட்டிங் பற்றியெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
பேய் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் குழந்தைத்தனமாக இருக்கின்றது. இயக்குனர் வடிவுடையானின் திரைக்கதையில் கொஞ்சம் கூட வலுவில்லை. அடுத்த காட்சி என்ன என்பதை சின்ன குழந்தைகூட சொல்லிவிடும். காஞ்சனா, காஞ்சனா 2, மாயா, போன்ற தரமான பேய்ப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் பெரும் ஏமாற்றத்தை தந்ததுதான் மிச்சம். படத்தின் பாதி நேரங்களை சரவணன், சிங்கமுத்து, பவர்ஸ்டார், மனோபாலா ஆகியோர்களின் காமெடி காட்சிகள் ஆக்கிரமித்து கொள்கிறது. அதுவும் எடுபடாததால் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இந்த லட்சணத்தில் படத்தின் முடிவின்போது பார்ட் 2 வேறு வரும் என்று பயமுறுத்துகிறார்கள்.
மொத்தத்தில் சவுகார்பேட்டை சரியான சறுக்குபேட்டை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments